அனல் பறக்கும் தேர்தல் களம்: மத்திய மந்திரி அமித்ஷா நாளை தமிழகம் வருகை - தொண்டர்கள் உற்சாகம்
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகன பேரணி, பொதுக்கூட்ட பிரசார நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.;
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அதன்படி, ஏப்ரல் 4, 5-ந்தேதிகளில் அவர் மதுரை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள்கள் பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகைதர உள்ளார். மதியம் 3.05 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சிவகங்கை செல்கிறார். அங்கு, சிவகங்கை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக, வாகனப் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். இந்த வாகனப் பேரணி ஒரு மணிநேரம் நடைபெற திட்டமிட்டுள்ளார்கள்.
அதன்பிறகு, சிவகங்கை தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோவில் மற்றும் உடனுறை சத்தியவாகீஸ்வரர் கோவிலில் மாலை 5 மணிக்கு சாமிதரிசனம் செய்கிறார். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மதுரை சென்று, பா.ஜனதா வேட்பாளர் ராமசீனிவாசனுக்கு ஆதரவாக 2 கிலோ மீட்டர் தூரம் வாகனப் பேரணி மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து, மதுரையில் நட்சத்திர ஓட்டலில் இரவு தங்குகிறார். மறுநாள் (சனிக்கிழமை), காலை 8 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தக்கலை பயணிக்கிறார். தக்கலையில் காலை 9.50 மணிக்கு கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாகன பேரணியில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார். இந்த வாகன பேரணி ஒரு மணிநேரம் நடத்தப்பட உள்ளது.
அதன்பிறகு, திருவனந்தபுரத்துக்கு மீண்டும் திரும்பி அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி சென்றடைகிறார். அங்கு மதிய உணவுக்கு பிறகு, ஹெலிகாப்டரில் திருவாரூர் பயணிக்கிறார். நாகையில் மதியம் 3 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, நாகை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
பின்னர், திருச்சி விமான நிலையம் திரும்பி, அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி பயணிக்கிறார். தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டரில் தென்காசி மாவட்டம் இலஞ்சி செல்கிறார். அங்கு, தென்காசி டவுண் பகுதியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை 5 கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணியில் பங்கேற்று தென்காசி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
அதன்பிறகு, தூத்துக்குடி சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். மத்திய மந்திரி அமித்ஷாவின் வருகை பா.ஜனதா தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.