ஆந்திராவில் வெற்றிக் கொடி நாட்டப்போவது யார்?

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளும், 25 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. தற்போது அங்கு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-04 10:13 GMT

சுந்தரத் தெலுங்கு பேசும் ஆந்திர மாநிலம், இந்தியாவின் தென்கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. அதுவரை ஆந்திர மாநில தலைநகராக இருந்த ஐதராபாத், தெலுங்கானா மாநில தலைநகராகியது. இதையடுத்து ஆந்திராவின் தலைநகராக அமராவதி உருவாக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளும், 25 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. தற்போது அங்கு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

சட்டசபை-நாடாளுமன்ற தேர்தல்

தற்போது நாடாளுமன்ற தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு அடுத்த மாதம் 13-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 175 சட்டசபை தொகுதிகளிலும், 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்தே களம் காண்கிறது.

அதே நேரம் கடந்த முறை ஆட்சியை பறிகொடுத்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சியில் உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து பிரசாரம் செய்த சந்திரபாபு நாயுடு, மீண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். மேலும் நடிகர் பவன்கல்யாண் கட்சியான ஜனசேனாவுடனும் கரம் கோர்த்துள்ளார். இந்த கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 10 சட்டசபை தொகுதிகளும், 6 நாடாளுமன்ற தொகுதிகளும், ஜனசேனா கட்சிக்கு 21 சட்டசபை தொகுதிகளும், 2 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

அண்ணன்-தங்கை மோதல்

இதேபோல் விட்ட இடத்தை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் மல்லுக்கட்டி வருகிறது. முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.சர்மிளா, தனியாக கட்சி தொடங்கி நடத்தி வந்தார். அவரது கவனம் தெலுங்கானாவில்தான் இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவரை மாநில தலைவராக்கியது காங்கிரஸ் கட்சி.

ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்தவர் முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அவருக்கு ஆந்திர மாநிலத்தில் தனி மதிப்பும் மக்கள் மத்தியில் இருந்தது. எனவே சர்மிளாவை காங்கிரஸ் கட்சியில் இணைத்து, மாநில தலைவராக்கியது. அதிரடி அரசியல் செய்யும் சர்மிளாவும் சொந்த அண்ணனையே எதிர்த்து போராட்டங்களை நடத்தினார். அவர் மீது கடுமையான விமர்சனங்களையும் வைத்தார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. அவர் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடப்பா நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

களம் யாருக்கு?

வளர்ச்சி மற்றும் மாநில நலன் என்ற அடிப்படையில் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலை எதிர்கொள்கிறார். இதற்காக அவர், ஆந்திரத்துக்கு ஜெகன் ஏன் தேவை? என்ற கோஷத்தை முன்னிருத்தி வாகன பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.அதற்கு எதிரான பிரசாரத்தை தேலுங்குதேசம் தலைமையிலான கூட்டணி கையில் எடுத்துள்ளது. ஆந்திரம் ஏன் ஜெகனை வெறுக்கிறது என்ற தலைப்பில் பிரசாரம் செய்கிறது. காங்கிரஸ் கட்சி, கர்நாடகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் உற்சாகத்துடன் தேர்தலை சந்திக்கிறது.ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரசும் களத்தில் உள்ளது.

வெற்றியை தக்க வைப்பாரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி?

அரசியல் சாணக்கியராக அறியப்படும் சந்திரபாபு நாயுடு சாதிப்பாரா?

மீண்டு வருமா காங்கிரஸ்?

மும்முனை போட்டியில் ஆந்திர மாநில மக்கள் வெற்றியை யாருக்கு வழங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆந்திர அரசியலில், சினிமா நட்சத்திரங்கள்

தமிழகத்தை போல் ஆந்திர மாநிலத்திலும் அரசியலில் சினிமா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சினிமாவில் கோலோச்சிய ஆந்திர சூப்பர் ஸ்டார் என்.டி.ராமாராவ், 1983-ம் ஆண்டு அரசியலில் குதித்தார். அவர் தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி ஆரம்பித்த 3 மாதங்களில் ஆந்திர மாநில ஆட்சியை பிடித்தார்.

அவரைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வந்தனர். ஆனால் என்.டி.ராமாராவை தவிர யாரும் முதல்-மந்திரி பதவிக்கு வரவில்லை. ஆந்திராவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவியும் பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் தாக்குப்பிடிக்க முடியாமல், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சில காலம் அதில் பயணித்த அவர், பின்னர் அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டார்.தற்போது அவரது தம்பியான பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறாார். என்.டி.ராமாராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இதேபோல் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியும், அரசியலில் உள்ளார். தனிக்கட்சி, பா.ஜனதா என பயணித்த அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். அதே நேரம் நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தற்போது மந்திரியாக உள்ளார்.

தேர்தல் நடைபெறும் தேதி:

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 25 ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுவை திரும்ப பெற 29 ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்