தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு - தனி வழியில் தமிழக அரசியல்
நாட்டின் மீது எந்த அளவுக்கு பக்தி உள்ளதோ, அந்த அளவுக்கு மாநிலத்தின் மீதும், மொழியின் மீதும் பற்று உள்ளவர்களாக தமிழர்கள் இருப்பார்கள்.;
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்...
இது நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கத்தின் பாடல் வரிகள்.
ஆம்... இது முற்றிலும் உண்மைதான். தமிழ்நாடும், தமிழர்களும் சிந்தனையால், செயலால் இந்தியாவிற்கே முன்னோடியாக இருப்பார்கள்.
நாட்டின் மீது எந்த அளவுக்கு பக்தி உள்ளதோ, அந்த அளவுக்கு மாநிலத்தின் மீதும், மொழியின் மீதும் பற்று உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் தனிப்பார்வை:
தமிழ்நாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாடும், வித்தியாசமாக இருக்கும். சட்டசபை தேர்தலில் ஒரு முடிவு எடுத்தால், நாடாளுமன்ற தேர்தலில் ஒரு முடிவை எடுப்பார்கள். மாநில நலனையும், உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்தும் தான் அந்த முடிவை எடுப்பார்கள். சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் தனிப்பார்வையுடன் முடிவுகளை எடுப்பார்கள் என்பது பல தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
மக்களின் எண்ணப்படியே தமிழக அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும், தங்களது பிரசாரத்தில் மாநில பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதன் அடிப்படையிலேயே கூட்டணிகளையும் அமைப்பார்கள்.
கருணாநிதி, ஜெயலலிதா இருபெரும் ஆளுமைகள்
1989ம் ஆண்டு முதல் கடந்த 2019ம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகள் காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில், மக்கள் எத்தகைய முடிவுகளை எடுத்தனர் என்பதை பார்த்தாலே, தமிழகம் எத்தகைய அரசியலை முன்வைத்துள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.
இந்த காலக்கட்டங்களில் தமிழக அரசியல், மறைந்த தலைவர்களான கருணாநிதியையும், ஜெயலலிதாவையுமே சுற்றி சுழன்று வந்தது. அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் பெரும் ஆளுமைகளாக இருந்தனர்.
அப்படிப்பட்ட தலைவர்களையே, தமிழக மக்களின் முடிவு, சில நேரங்களில் புரட்டிப்போட்ட வரலாறும் உண்டு. இருப்பினும் அவர்கள் இருவரும், மக்கள் செல்வாக்குடன் மீண்டு வருவார்கள். அதுதான் அவர்கள் இருவரையும், தமிழகம் தாண்டி இந்திய அளவில் உயரத்துக்கு கொண்டு சென்றது.
தமிழகத்தில் காங்கிரசின் தாக்கம்
அதே நேரம் தமிழகத்தில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இன்னமும் குறிப்பிட்ட செல்வாக்கு உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இறங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி இன்னமும் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகவே இருந்து வருகிறது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள், பெரும்பாலான சமயங்களில் அமோக வெற்றியை பெற்று வருவதே இதற்கு காரணம். கடந்த 1989, 1991-ம் ஆண்டுகளில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. அதேபோல் கடந்த 2004, 2009, 2019-ம் ஆண்டுகளில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த தி.மு.க.வும் மாபெரும் வெற்றி பெற்றது.
கடந்த 1996-ம் ஆண்டில் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததை தொண்டர்கள் விரும்பவில்லை. எனவே காங்கிரசில் இருந்து மூத்த தலைவராக ஜி.கே.மூப்பனார் தனியாக பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். தி.மு.க.வுடன் த.மா.கா. கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளையும் கைப்பற்றியது. சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
தமிழகத்திற்கு பா.ஜ.க.வின் வரவு
இந்த வரிசையில் 1998, 1999-ம் ஆண்டுகளில் தமிழக அரசியலில் பா.ஜ.க.வின் வரவு மக்களையும், அரசியல் கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்தது.
அந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகள் பா.ஜ.க கூட்டணியை அமைத்து வெற்றிகளை குவித்தன.
இதன்பிறகுதான் தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு தொகுதி எண்ணிக்கையை குறைத்தன. அதற்கு பதில் அந்த 2 கட்சிகளும் அதிக இடத்தில் நிற்க தொடங்கின.
'மோடியா...? லேடியா...? - தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்த அ.தி.மு.க.
இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க.வை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் புறக்கணித்தன.
அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா புதிய வரலாறு ஒன்றை படைத்தார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் தனித்து நின்றார். நாடு முழுவதும் மோடி அலை வீசியபோது, தமிழகத்தில் ஜெயலலிதா கூறிய 'மோடியா...? இந்த லேடியா...?' என்ற வார்த்தை தமிழத்தில் ஜெயலலிதா அலையாக மாறி வீசியது. 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி அசுர வெற்றிபெற்றது.
சாதித்த தி.மு.க.
2019-ம் ஆண்டு நடைபெற்ற நடாளுமன்ற தேர்தல் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு ஒரு ரசாயன பரீட்சையாக அமைந்தது. தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலையே ஆட்டிப்படைத்த இருபெரும் தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது மறைவுக்கு பின்னர் நடைபெற்ற இந்த தேர்தல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இருந்தார். அதேபோல அ.தி.மு.க.வில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக பொறுப்பேற்று இருந்தனர்.
இந்த நேரத்தில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இருந்த எதிர்ப்பலையை சாதகமாக பயன்படுத்திய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், 2 கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம,தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகளை ஓரணியில் திரட்டி ஒரு வலுவான கூட்டணியை அமைத்தார். எதிர்தரப்பில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க, பா.ம.க. தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று இருந்தன.
தமிழக கள நிலவரத்தை நன்கு அறிந்து இருந்த மு.க.ஸ்டாலினின் வியூகமும், பா.ஜ.க. எதிர்ப்பு அலையும் தி.மு.க. கூட்டணிக்கு அமோக வெற்றியை பெற்றுத்தந்தது. (வேலூர் தொகுதிக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால், அதை தவிர்த்து 37 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து பின்னர் நடந்த வேலூர் தேர்தலில் தி.மு.க.வே வெற்றி பெற்றது.) இந்த வெற்றியே அடுத்து 2021-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலினை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற நிலைக்கு உயர்த்தியது.
இந்த தேர்தலிலும் காங்கிரஸ் இடம் பெற்ற கூட்டணியே வென்றது. அதுவும், ராகுல் காந்திதான் எங்கள் பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தது, தமிழக மக்கள் மத்தியில் எடுபட்டது.
ஒட்டுமொத்த நாட்டிலும் பிரதமர் மோடி அலை வீசியபோதும், வழக்கம்போல் தமிழர்கள் தனிவழியில் பயணித்து அதிரடியான வித்தியாசமான முடிவை எடுத்தனர்.
நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருமா காங்கிரஸ் 'கெமிஸ்டிரி'?
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 950 பேர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைபோட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் புதிதாக இணைந்துள்ளது. மற்றபடி முன்பு இருந்த கட்சிகள் அப்படியே இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. ஒரு கூட்டணி அமைத்து போட்டியிட்டதுபோல், 10 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. தற்போதும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., புதியநீதி கட்சி, ஐ,ஜே.கே., ஓ.பன்னீர்செல்வம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இரண்டு பிரதான கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய கூட்டணியை கட்டமைத்ததன் மூலம், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு முயற்சியை எடுத்துள்ளார்.
அதே நேரம் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு அடுத்து அதிக வாக்கு சதவீதத்தை வைத்துள்ள நாம் தமிழர் கட்சியும் 40 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது. நாம் தமிழர் கட்சியின் வாக்குசதவிகிதம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். எனவே களத்தில் நாம் தமிழர் கட்சியும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
4 முனை போட்டியில், கடுமையான போட்டி இருக்கும் தொகுதிகளில் வெற்றியை நிர்ணயம் செய்வது சில ஆயிரம் ஓட்டுகளே. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி வித்தியாசம் சுமார் 8 ஆயிரம் வாக்குகளே.
பிரசார களத்தில் அனல் பறக்கிறது. இந்த முறையும் காங்கிரஸ் 'கெமிஸ்டிரி' தொடருமா? அல்லது கணக்கு மாறுமா? என்பது கேள்வி.
ஏப்ரல் 19-ந் தேதி தமிழக வாக்காளர்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி எண்பதால் கேள்விக்கான விடை அன்றைய தினம் தெரிந்துவிடும்.