150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்தாரா..? - காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்ட தேர்தல் கமிஷன்

150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்து பேசியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.;

Update:2024-06-03 03:21 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதையொட்டி 150 மாவட்ட கலெக்டர்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்து பேசியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக விளங்கி வரும் இந்த கலெக்டர்களை சந்தித்து இருப்பது அப்பட்டமான மற்றும் வெட்கக்கேடான மிரட்டல் என குற்றம் சாட்டியிருந்த அவர், இதன் மூலம் பா.ஜனதா எவ்வளவு அவநம்பிக்கையில் உள்ளது என்பது வெளிப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.

ஜெய்ராம் ரமேசின் இந்த கருத்துக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு உள்ளது. இது தொடர்பாக அவருக்கு தேர்தல் கமிஷன் எழுதியுள்ள கடிதத்தில், 'வாக்குகளை எண்ணும் செயல்முறை ஒவ்வொரு தேர்தல் அதிகாரிக்கும் கொடுக்கப்படும் ஒரு புனிதமான கடமையாகும். இதுபோன்ற பொது அறிக்கைகள் சந்தேகத்தின் கூறுகளை வைக்கின்றன. இத்தகைய சந்திப்பு நிகழ்ந்ததாக எந்த கலெக்டரும் அறிக்கை அளிக்கவில்லை' என கூறியுள்ளது. எனவே அந்த 150 கலெக்டர்களின் விவரத்தை இன்று (நேற்று) 7 மணிக்குள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்