நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினரின் சித்து வேலைகள் பலிக்காது - சசிகலா
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் தமிழக மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று சசிகலா கேள்வி எழுப்பினார்.
சென்னை,
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் தமிழக மக்களுக்கு என்ன நல்லது செய்தார்கள்? அவ்வாறு ஏதாவது மக்களுக்கு நல்லது செய்து இருந்தால்தான் இப்போது அதை சொல்ல முடியும்.
மக்களுக்கு ஏதும் செய்யாததால் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுவதை விட்டுவிட்டு கண்டதையும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். எதிர்கட்சியினரிடம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை போன்று வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் கதையாக தி.மு.க.வின் தலைவர் வழக்கமான சித்து வேலைகளை செய்து பார்க்கிறார்.
ஆனால் இதுபோன்ற சித்து வேலைகள் எப்போதும் பலிக்காத என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் சசிகலா தெரிவித்துள்ளார்.