தி.மு.க. கூட்டணிக்கு, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆதரவு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.;

Update:2024-04-13 23:24 IST

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மத்தியக் குழு தலைவர் நரேன் சாட்டர்ஜி, பொதுச் செயலாளர் ஜி.தேவராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கும், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான முன்னணி வேட்பாளர்களுக்கும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆதரவு அளிக்கும்" என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 



Tags:    

மேலும் செய்திகள்