தி.மு.க. சொல்வது அனைத்தும் பச்சைப்பொய் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2024-04-17 05:24 GMT

சேலம்,

சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்திற்க்கும் குறைவான அறிவிப்புகளை மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன; ஆனால் 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க. கூறுவது அனைத்தும் பச்சைப்பொய்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதியாக உள்ளது; அதனை திமுக எதிர்க்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு பெட்ரோல்,டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை குறையவில்லை. பா.ஜ.க.வும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் எதையும், தமிழகத்திற்கு 10 ஆண்டுகளாக தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பா.ஜ.க. அரசு முழுமையாக வழங்குவதில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை

அ.தி.மு.க.வை அழித்துவிடுவதாக அண்ணாமலை கூறுவது வெற்று வார்த்தைதான். டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியது கூட தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதால் எந்த பயனும் இல்லை. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்பேன். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்?. கொள்கைக்கு ஒத்த கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி; உரிமைகளை நிலைநாட்ட தனித்துதான் நிற்க வேண்டும்.

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்து புதிய வரலாற்றுச் சாதனையை படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்