விருதுநகரில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விஜய பிரபாகரன் விருப்ப மனு
அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க.-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 27-ந் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க போட்டியிடுகிறது.
இந்தநிலையில், மத்திய சென்னை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி ஆகிய 5 தொகுதிகளை தே.மு.தி.க. வுக்கு அ.தி.மு.க ஒதுக்கி உள்ளது. தே.மு.தி.க சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதிஷ் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தற்போது மாணிக்கம் தாக்கூர் காங்கிரஸ் எம்.பி.,யாக உள்ளார். இவர் 4,70,883 வாக்குகளை பெற்று வென்றார். இங்கே கடந்த முறை தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் 3,16,329 வாக்குகளை பெற்றார்.
இங்கே தே.மு.தி.க நல்ல வாக்கு வங்கியை பெற்றுள்ளதால் தற்போது விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தே.மு.தி.க சார்ப்பில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.