சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்தாரா சரத்பவார்..? வெளியான முக்கிய தகவல்

நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

Update: 2024-06-04 11:10 GMT

கோப்புப்படம்

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 17 இடங்கள் முன்னிலை வகிக்கின்றன.

மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். பா.ஜனதா கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க 'இந்தியா கூட்டணி'யில் உள்ள தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

பா.ஜனதா மத்தியில் ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. ஏனெனில் தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 14 என மொத்தம் 30 தொகுதிகளை வைத்திருக்கின்றன.பா.ஜனதா 242 இடங்களை கைப்பற்றும் என வைத்துக் கொண்டால் மேற்சொன்ன இரண்டு கட்சிகளின் இடங்களையும் கூட்டினால் 272 என பெரும்பான்மை கிடைத்து விடுகிறது. இதனுடன் சிறிய கட்சிகளையும் சேர்த்து கொண்டால் பா.ஜனதாவின் பலம் கூடி விடும். எனவே பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பதில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தவிர்க்க முடியாத கட்சிகளாக மாறியுள்ளன.

இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது. அதேபோல, கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு பேசியதாகவும் தகவல் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை தொடர்பு கொண்டதாக வெளியான தகவலை சரத் பவார் மறுத்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நான் இதுவரை யாருடனும் பேசவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்