ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிந்த கட்சிதான் அதிக வாக்குறுதிகள் வழங்கும்.. காங்கிரசை சாடிய தேவ கவுடா
ராகுல் காந்தியின் முதிர்ச்சியற்ற பொருளாதார யோசனைகளை தேர்தல் அறிக்கை குழு தலைவர் சிதம்பரம் ஏற்றுக்கொள்கிறாரா? என தேவ கவுடா கேள்வி எழுப்பி உள்ளார்.;
புதுடெல்லி:
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சாதிவாரி கணக்கெடுப்பு, சொத்து மறுபங்கீட்டு வாக்குறுதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியிருக்கிறது. இந்த தேர்தல் அறிக்கையானது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி தேடித்தரும் என காங்கிரஸ் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவ கவுடா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பெங்களூருவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது தேவ கவுடா பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆட்சிக்கு வர முடியாது என்று உறுதியாக தெரிந்திருக்கும் கட்சிதான் இவ்வளவு வாக்குறுதிகளை அளிக்கும்.
நாட்டை தலைகீழாக மாற்றுவதற்கு காங்கிரஸ் விரும்புகிறது. எந்த விலை கொடுத்தாவது ஆட்சிக்கு வர விரும்புவதையே அவர்களின் வாக்குறுதிகள் காட்டுகின்றன.
சொத்து கணக்கெடுப்பு நடத்தி பகிர்ந்து கொடுக்க ராகுல் காந்தி விரும்புகிறார். அவர் தன்னை மிகப்பெரிய மக்கள் தலைவர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாரா? புரட்சி செய்வதாக கனவு காண்கிறார். சொத்து மறுபங்கீடு குறித்து பேசுவதன்மூலம், சந்தை சீர்திருத்தங்கள் கொண்டு வந்து நாட்டின் செல்வத்தை அதிகரித்த காங்கிரஸ் பிரதமர்கள் நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோரை அவமானப்படுத்தி உள்ளார்.
இரண்டு காங்கிரஸ் பிரதமர்களும் செய்தது தவறு என்று ராகுல் காந்தி மறைமுகமாக சொல்ல முயற்சிக்கிறார். மன்மோகன் சிங் அரசு பிறப்பித்த அவசர சட்ட நகலை (தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்யும் விதியை ரத்து செய்வது தொடர்பான அவசர சட்டம்) கிழித்ததைப் போல, காங்கிரஸ் பிரதமர்களின் பொருளாதார சீர்திருத்தங்களை கிழித்தெறிந்திருக்கிறார்.
புதிதாக 30 லட்சம் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளது. 30 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணிகள் வழங்கி நாட்டை நடத்த காங்கிரஸ் விரும்புகிறது. அனுமதிக்கப்பட்ட மொத்த மத்திய அரசுப் பணியிடங்களே 40 லட்சம்தான். இவர்களால் ஒரே இரவில் 30 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்க முடியும்? இவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்? இவர்களை எந்தெந்த துறைகளில் வேலைக்கு அமர்த்துவார்கள்?
நடைமுறை அறிவு இல்லாத ஒருவரால்தான் இப்படி பேச முடியும். இந்த தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக சிதம்பரம் இருந்தார். அவர், ராகுல் காந்தியின் இத்தகைய முதிர்ச்சியற்ற பொருளாதார யோசனைகளை ஏற்றுக்கொள்கிறாரா?
இவ்வாறு தேவ கவுடா கூறினார்.