கடலூர் தொகுதி பா.ம.க. வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் போட்டி
அழகி, பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான்.;
சென்னை,
தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே (ஏப்ரல் 19-ந்தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.
இதில் பா.ஜ.க. தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
அதில் கடலூர் தொகுதி பா.ம.க. வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ளார். 9 ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, அம்மாவின் கைப்பேசி, களவாடிய பொழுதுகள் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான். பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து பேசி வந்த தங்கர் பச்சான், முதன்முறையாக நேரடி அரசியலில் களமிறங்கியுள்ளது பலரையும் உற்றுநோக்க செய்துள்ளது.
பா.ம.க. வேட்பாளராக போட்டியிடுவது ஏன் என்பது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழர்களின் இனம், மொழி, பண்பாடு, அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு என பலவற்றுக்கும் முதல் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சிதான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளை விட ஒரு பிரச்சினை என்றால் முதலில் களத்தில் இறங்கி போராடுவது பா.ம.க.தான். அது மக்களுடைய இயக்கமாக இருப்பதால் நான் பா.ம.க.வில் இணைந்து தற்போது கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.