மோடியின் பேச்சால் எழுந்த சர்ச்சை.. இஸ்லாமியர்கள் குறித்து மன்மோகன் சிங் சொன்னது என்ன?

பிரதமர் மோடியின் பேச்சு உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.

Update: 2024-04-22 11:19 GMT

புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசியதும், இஸ்லாமியர்கள் குறித்து தெரிவித்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தாக்கிப் பேசிய அவர், நாட்டில் உள்ள பெண்களின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு விநியோகம் செய்ய காங்கிரஸ் விரும்புவதாக கூறினார்.

"இதற்கு முன்பு, அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறினர். அதாவது, இந்த சொத்து யாருக்கு பகிர்ந்தளிக்கப்படும்? அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு இது பகிர்ந்து அளிக்கப்படும், ஊடுருவல்காரர்களுக்கு வழங்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதற்கு நீங்கள் ஆமோதிப்பீர்களா?

சகோதர, சகோதரிகளே, இந்த 'அர்பன் நக்சல்' எண்ணங்கள் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்காது. அவர்கள் அந்த அளவுக்குகூட செல்வார்கள். தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று, அந்த சொத்தை பங்கிட்டு கொடுப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. இதற்கு முன்பு மன்மோகன் சிங் அரசு 'நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு' என்று சொன்னதைப்போல பகிர்ந்தளிப்பார்கள்" என்று பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்றும், தோல்வி பயத்தால் வெறுப்பு விதைகளை விதைப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.

மன்மோகன் சிங் பேசியது என்ன?

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உரை நிகழ்த்தினார்.

அப்போது "பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டு திட்டங்களுடன், விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நீர் ஆதாரங்கள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடு மற்றும் பொது உள்கட்டமைப்பின் பொது முதலீட்டுத் தேவை ஆகியவை நமது கூட்டு முன்னுரிமைகள் என்பது தெளிவாக உள்ளது.

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் புத்துயிர் பெற வேண்டும். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலன்களை சமமாக பெறும் அதிகாரம் பெறுவதை உறுதிசெய்ய, புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் பாத்தியதையை அவர்கள் பெறவேண்டும்" என பேசினார்.

மன்மோகன் சிங்கின் இந்த பேச்சு அப்போது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மறுநாளே பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்தது.

அதில், "தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், அரசாங்கத்தின் நிதி முன்னுரிமைகள் குறித்து, பிரதமர் பேசியதை, வேண்டுமென்றே தவறாக சித்தரித்ததன் மூலம், தவிர்க்க முடியாத சர்ச்சை உருவாகியுள்ளது. பிரதமரின் கருத்துகள் சில மின்னணு ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்டதால் ஆதாரமற்ற சர்ச்சை எழுந்துள்ளது" என்று விளக்கம் அளித்ததுடன், பிரதமர் பேசிய அந்த குறிப்பிட்ட பத்தியை மீண்டும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்