பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை பேச்சு; சத்தீஷ்கார் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக வழக்கு
பிரதமர் மோடியை கம்புடன் எதிர்கொள்ள கூடிய தகுதி வாய்ந்த சிலர் நமக்கு வேண்டும் என சரண் தாஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராஜ்நந்த்காவன்,
சத்தீஷ்காரில் ஏப்ரல் 9, 26 மற்றும் மே 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக 11 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 9 தொகுதிகளை கைப்பற்றியது. இந்திய தேசிய காங்கிரசுக்கு 2 தொகுதிகளே கிடைத்தன.
2014 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 10 தொகுதிகளும் இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரே ஒரு தொகுதியும் கிடைத்தன. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சத்தீஷ்காரில், காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவரான சரண் தாஸ் மகந்த், ராஜ்நந்த்காவன் நகரில் கொத்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த பொது பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, பிரதமர் மோடிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. கட்சியின் நட்சத்திர பிரசாரகரான சரண், பொது மக்கள் முன்னிலையில் பேசும்போது, உங்களுடைய வருங்கால நலனுக்காக முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகெலின் வெற்றியை உறுதி செய்யுங்கள் என வலியுறுத்தினார்.
பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கான சாம்பியனாக பாகெல் இருக்கிறார் என்று புகழ்ந்து பேசியதுடன், பிரதமர் மோடிக்கு எதிராக போராட கூடிய ஒரு பாதுகாவலர் நமக்கு தேவையாக இருக்கிறார். பிரதமர் மோடியை கம்புடன் எதிர்கொள்ள கூடிய தகுதி வாய்ந்த சிலர் நமக்கு வேண்டும். அதற்கு சரியான ஆள் பாகெல் ஆவார் என்று அவர் பேசினார்.
அவருடைய இந்த பேச்சு சர்ச்சையானது. இதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவின்பேரில், 506-வது பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டது. சரணின் சர்ச்சை பேச்சுக்கு ஆளும் பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பா.ஜ.க. எம்.பி. மற்றும் தேசிய செய்தி தொடர்பாளரான சுதன்ஷு திரிவேதி கூறும்போது, பிரதமர் மோடிக்கான மக்களின் அன்பும், ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், எதிர்க்கட்சி தலைவர்கள், அதிலும் காங்கிரஸ் கட்சியினரின் மனநிலை பாதிப்படைந்து உள்ளதுபோல் தெரிகிறது.
இதுபோன்று பேசுவதே காங்கிரசாரின் பழக்கம் என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். ஜனநாயகத்தில் இதுபோன்று பேசுவது வருத்தம் தருகிறது. காந்தியின் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள் என காங்கிரசார் கூறி வருகின்றனர். அப்படி இருக்கும்போது இந்த காரணத்திற்காக, காந்தி கையில் கம்பு வைத்திருக்கும் வழக்கம் கொண்டவரா? என்றும் திரிவேதி கேள்வி எழுப்பினார்.