கூட்டணி கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டி - பா.ஜ.க.வில் இருந்து நடிகர் பவன் சிங் நீக்கம்

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்ட போஜ்புரி நடிகர் பவன் சிங்கை கட்சியில் இருந்து பா.ஜனதா இடைநீக்கம் செய்துள்ளது.

Update: 2024-05-23 06:45 GMT

பாட்னா,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. கடந்த மார்ச் 2-ந் தேதி வெளியிட்டது. இதில் 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றன. மேற்கு வங்காள மாநிலம் அசான்சோல் தொகுதியில் பிரபல போஜ்புரி நடிகரும், பாடகருமான பவன் சிங் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, சமூக ஊடகங்களில் இவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். பவன் சிங் பாடிய பல திரைப்பட பாடல்கள், மேற்கு வங்காள பெண்களை கிண்டல் செய்தும், இழிவுபடுத்தியும் பாடப்படுவதுபோல இருப்பதாக விமர்சனம் செய்தனர். எனவே போட்டியில் இருந்து விலகுமாறு பவன் சிங்கை பா.ஜனதா அறிவுறுத்தியது. இதையடுத்து அசான்சோல் தொகுதியில் போட்டியிடவில்லை என்று பவன் சிங் அறிவித்தார்.

பீகாரில் உள்ள கரகாட் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவின் தலைவரான முன்னாள் மத்திய மந்திரி உபேந்திர குஷ்வாகா போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக ஜூன் 1-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட போவதாக பவன் சிங் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அத்துடன் வேட்புமனுவும் தாக்கல் செய்தார். தனது வேட்புமனுவை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற போவதில்லை என்று பவன் சிங் கடந்த வாரம் கூறியிருந்தார்.

பவன் சிங் தனது வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும், இல்லையெனில் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று பா.ஜனதா மூத்த தலைவரும், பீகார் மந்திரியுமான பிரேம் குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், "வேட்புமனுவை வாபஸ் பெறமாட்டேன். நான் கலைஞன், என் மீது பா.ஜனதா நடவடிக்கை எடுக்க குற்றவாளியும் அல்ல. இது இந்தியா, இங்குள்ள அனைவருக்கும் வாழ உரிமை உள்ளது. யார் என்ன சொன்னாலும் தேர்தலில் போட்டியிடுவேன்" என்று பவன் சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.

இதற்கிடையே "கட்சியின் முடிவுக்கு எதிராக கரகாட் மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதற்காக பா.ஜ.க.வில் இருந்து பவன் சிங் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். இந்த முடிவை பீகார் பா.ஜனதா தலைவர் சாம்ராட் சவுத்ரி எடுத்துள்ளார்" என்று பா.ஜனதா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

முன்னதாக இதே தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பவன் சிங்கின் தாய் பிரதிமா தேவி தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்