மத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்குவதே காங்கிரசின் நோக்கம் - ப.சிதம்பரம்
மத வேறுபாடின்றி ஒவ்வொரு பிரிவினருக்கும் நீதி வழங்குவதே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நோக்கம் என்று பா.ஜனதா புகாருக்கு ப.சிதம்பரம் பதில் அளித்தார்.;
சிம்லா,
காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், ஒரு சமூகத்தை திருப்திப்படுத்தும் அம்சங்கள் இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் சொத்துகளை பறித்து, ஒரு மதத்தினருக்கு பகிர்ந்து அளித்துவிடும் என்றும் பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு தலைமை தாங்கியவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம், இமாசலபிரதேச தலைநகர் சிம்லாவுக்கு வந்தார்.
அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "ஏதேனும் ஒரு சமூகத்தை திருப்திப்படுத்துவது போல், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒரு பத்தியாவது இருப்பதாக காட்ட முடியுமா என்று பிரதமருக்கும், பா.ஜனதா தலைவர்களுக்கும் சவால் விடுக்கிறேன்.
சமுதாயத்தில் சமூக பிளவு இருப்பதை உணர்ந்துள்ளோம். சமூக, பொருளாதாரரீதியான ஏற்றத்தாழ்வு நிலவுவதை அங்கீகரிக்கிறோம். மிகவும் பாதிக்கப்பட்டவர்களான எஸ்.சி., எஸ்.டி., மத பாகுபாடின்றி ஏழை இந்துக்கள், ஏழை முஸ்லிம்கள், ஏழை கிறிஸ்தவர்கள், ஏழை சீக்கியர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் நீதி வழங்குவதே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நோக்கம்.
நீதி வழங்குவதுதான் 'திருப்திப்படுத்துதல்' என்று நீங்கள் கருதினால், அப்படியே இருக்கட்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, மக்களை கவர்ந்துள்ளது. அது பா.ஜனதாவுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் ஒன்றுமே இல்லை.
காங்கிரஸ் கட்சிக்கு நிதி தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். காங்கிரசுக்கு கிடைத்த நன்கொடைகள் அனைத்தும் வங்கிக்கணக்குகளில் உள்ளன. ஆனால் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. எந்த கணக்கையும் இயக்க ஒரு வங்கியும் அனுமதிக்கவில்லை. அதே சமயத்தில், பா.ஜனதா விளம்பர பலகைகள், டெலிவிஷன் விளம்பரங்கள் என்று கலக்குகிறது. அக்கட்சி ரூ.8 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரங்கள் பெற்றதுதான் அதற்கு காரணம்.
எனவே, நாங்கள் சமமற்ற போட்டிக்களத்தில் இருக்கிறோம். இருப்பினும், பிரசாரத்தை பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள். பிரதமர் மோடி 400 தொகுதிகளில் வெற்றி பெற போவதாக கூறுகிறார். வேறு நாட்டிலும் போட்டியிட்டால்தான் அதற்கு வாய்ப்பு ஏற்படும்.
தமிழ்நாட்டில் 25 தொகுதிகளிலும், கேரளாவில் 20 தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியடையும்" என்று ப.சிதம்பரம் கூறினார்.