காங்கிரஸ், மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக பகல் கனவு காண்கிறது: பா.ஜ.க. குற்றச்சாட்டு
காங்கிரசார் அடிமட்ட அளவில் இறங்கி பணியாற்றி, பொதுமக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத் கூறினார்.;
பாட்னா,
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 4-ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு பின் வெளியான கருத்து கணிப்பு முடிவுகள், பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என தெரிவிக்கின்றன.
இந்த கூட்டணி 350-க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி, பீகாரில் பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ஏழைகள், விவசாயிகள் பற்றி பிரதமர் மோடி கவலை கொள்கிறார். அவர் ஒருவரே, நாட்டை முன்னேற்ற பாடுபடுகிறார். அவர் ஒருவரே, நாட்டை பாதுகாக்கிறார் என கூறியுள்ளார்.
பீகாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டுள்ள அவர், தொடர்ந்து பேசும்போது, மக்கள் பகலில் கனவு காண எந்த கட்டுப்பாடும் இல்லை. காங்கிரசின் செயல்பாடு மோசமடைந்து உள்ளது. ஏனெனில் அவர்கள் பகலிலேயே கனவு காண்கின்றனர். அதனை அவர்கள் நிறுத்தவே இல்லை.
அடிமட்ட அளவில் அவர்கள் இறங்கி பணியாற்ற வேண்டும். அதன்பின் பொதுமக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ள வேண்டும். பிரதமர் மோடியை விமர்சிப்பது மற்றும் தகாத வகையில் பேசுவது ஆகியவற்றை அவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.
கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தென்னிந்திய பகுதிகளிலும் மத்திய மந்திரி அமித்ஷா ராஜதந்திரத்துடன் செயல்பட்டு உள்ளார் என்றும் அவர் புகழ்ந்து கூறியுள்ளார்.