'அமேதி தொகுதியில் காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது' - ஸ்மிரிதி இரானி விமர்சனம்

அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்கு முன்பாகவே தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதாக ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.;

Update: 2024-05-03 09:55 GMT

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியில் களமிறங்கியுள்ள ராகுல் காந்தி, 2-வதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் லால் சர்மா களமிறங்கியுள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி, இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்கு முன்பாகவே தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதாக ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதாக ராகுல் காந்தி உணர்ந்திருந்தால், அமேதி தொகுதியில் அவரே போட்டியிட்டிருப்பார். இதை பிரதமர் மோடி ஏற்கனவே கணித்துவிட்டார். கேரளாவின் வயநாட்டில் தேர்தல் முடிந்த பிறகு, காந்தி குடும்பத்தினர் புதிய இடத்தை தேர்வு செய்வார்கள் என்று பிரதமர் கூறியது போலவே தற்போது நடந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 2 ஆண்டுகள் கொரோனாவால் கழிந்துவிட்டதால், மீதம் இருந்த 3 ஆண்டுகளில் அமேதி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். இதனால் பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்."

இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்