இறப்பதற்கு முன் 'ஹே ராம்' என்று கூறிய காந்தியை பின்பற்றுகிறது காங்கிரஸ் - பிரியங்கா

பிரதமர் பொய்களை கூறுகிறார் என்றும், காங்கிரஸ் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது அல்ல என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Update: 2024-05-17 00:04 GMT

கோப்புப்படம்

ரேபரேலி,

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையில் பங்கேற்காத காங்கிரஸ் கட்சி, இந்து மதத்துக்கு எதிரானது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதை மறுத்துள்ள பிரியங்கா காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் கூறுவதாக சாடியுள்ளார்.

ரேபரேலியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது அவர் கூறுகையில், 'நாங்கள் இந்து மத விரோதிகள் என எங்களை குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் இறக்கும் வேளையில் ஹேராம் எனக்கூறிய மகாத்மா காந்தியின் கொள்கைகளைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்' என தெரிவித்தார்.

மேலும் அவர், 'ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்காததற்காக அவர்கள் எங்களை இந்து மத விரோதிகள் என கூறுகிறார்கள். உத்தரபிரதேசத்தின் கோசாலைகளின் நிலையை பாருங்கள். இறந்த ஒரு பசுவின் இறைச்சியை நாய் உண்ணும் வீடியோ வெளியாகி இருக்கிறது. தங்களை இந்து மத பாதுகாவலர்களாக கூறுபவர்கள், கோசாலைகளின் பரிதாப நிலையை கண்டுகொள்ளவில்லை' என பிரியங்கா குற்றம் சாட்டினார்.

மேலும் இந்திரா, ராஜீவ் காலத்தில் இருந்தே ரேபரேலி தொகுதிக்கும் காந்தி குடும்பத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறிய பிரியங்கா, ராகுல் காந்தி வெற்றி பெற்றபிறகும் இந்த மரபை அவர் பின்பற்றுவார் என்றும் உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்