'காங்கிரஸ் கட்சி நாட்டை தனது சொத்தாக கருதுகிறது' - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி நாட்டை தனது சொத்தாக கருதுகிறது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.;

Update: 2024-05-25 13:43 GMT

Image Courtesy : ANI

பாட்னா,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து 7-ம் கட்டமாக 57 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் பீகார் மாநிலம் பக்சார் தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை தங்களுடைய சொத்தாகவும், தங்கள் இளவரசரை(ராகுல் காந்தி) அதன் வாரிசாகவும் கருதுகிறது. 5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் வருவார்கள் என 'இந்தியா' கூட்டணி கூறுகிறது. இவ்வளவு பெரிய நாட்டை இப்படி வழிநடத்த முடியுமா?

அவர்களது கலாசாரத்தில் ஊழல் ஊறிப்போய்விட்டது. தங்கள் வாக்கு வங்கியை திருப்திபடுத்துவதற்காக 'இந்தியா' கூட்டணி எதை வேண்டுமானாலும் செய்யும். முஸ்லிம்களுக்கே இந்த நாட்டில் முன்னுரிமை இருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. அவர்கள் எஸ்.சி., எஸ்.டி. ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

500 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் கனவுகள் நனவாகும் வகையில் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பக்சார் பகுதியில் இருந்து மக்கள் ராமருக்காக பரிசுகளை அனுப்பிக் கொண்டிருந்தபோது, இந்த நாடே கொண்டாட்டத்தில் இருந்தபோது, சிலர் ராமர் கோவில் கும்பிஷேகத்திற்கு வராமல் தவிர்த்துவிட்டார்கள். 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அனைத்து புனித காரியங்களுக்கும் தடையை ஏற்படுத்துகிறார்கள்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்