கச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை - ஜெய்சங்கர்
கச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை உள்ளது என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.;
டெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதேவேளை, தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. இந்தியா - இலங்கை இடையேயான கச்சத்தீவு கடந்த 1974ம் ஆண்டுவரை இந்தியா வசம் இருந்தது. 1974ம் ஆண்டு இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அந்த ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். மேலும், கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதற்கு காங்கிரஸ், தி.மு.க.தான் முக்கிய காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேபோல், பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு பற்றிய புதிய விவரங்கள் வெளிப்பட்டுவருவதனால் முற்றிலும் இரட்டை நிலைப்பாட்டை கொண்ட தி.மு.க.வின் வேடம் கலைந்துள்ளது' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
கடந்த 20 ஆண்டுகளில் இந்திய மீனவர்கள் 6 ஆயிரத்து 184 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 ஆயிரத்து 175 இந்திய மீனவர்கள் படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு கட்சிகளால் கச்சத்தீவு விவகாரம் குறித்த கேள்விகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டன. அதுதொடர்பான விவாதங்களும் நடைபெற்றன. அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சரும் கச்சத்தீவு குறித்து பல முறை கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் குறித்து இப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதங்களுக்கு நான் 21 முறை பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு விவகாரம் திடீரென வரவில்லை. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. கச்சத்தீவு விவகாரம் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்டங்களாக விவாதிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடித பரிமாற்றம் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
கச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்கும் சூழ்நிலையில் தற்போதைய மத்திய அரசு உள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்க காங்கிரசும், பா.ஜ.க.வும் தான் காரணம்
இவ்வாறு அவர் கூறினார்.