நேரு செய்த தவறுகளுக்கு பிரதமர் மோடியை பொறுப்பேற்க சொல்வதா? - காங்கிரஸ் மீது ஜெய்சங்கர் சாடல்

சீன விவகாரத்தில் நேரு செய்த தவறுகளுக்கு காங்கிரஸ் பிரதமர் மோடியை பொறுப்பேற்க சொல்கிறது என்று ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2024-05-13 14:59 GMT

மும்பை,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

இதனிடையே, 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதனைதொடர்ந்து வரும் 20, 25 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றும் நிலையில் அரசியல் கட்சியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியுமான ஜெய்சங்கர் மராட்டிய மாநிலம் மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சீன விவகாரத்தில் நேரு செய்த தவறுகளுக்கு காங்கிரஸ் பிரதமர் மோடியை பொறுப்பேற்க சொல்கிறது என்று ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். சீன விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜெய்சங்கர் பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவின் லடாக், அருணாச்சலபிரதேசத்தில் உள்ள பகுதிகளை சீனா 1958 முதல் 1962 வரையிலான ஆண்டுகளில் அபகரித்துக்கொண்டது. சில பகுதிகளை 1958ம் ஆண்டுக்கு முன்பே எடுத்துக்கொண்டது. நாட்டின் முன்னாள் பிரதமர் நேரு செய்த தவறுகளுக்கு தற்போது பிரதமர் மோடி பொறுப்பேற்க முடியாது. கடந்த காலங்களில் நேரு செய்த தவறுகளுக்கு பா.ஜ.க. பொறுப்பேற்காது. இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக ராகுல்காந்தி தொடர்ந்து கூறுகிறார். ஆனால், 1962ம் ஆண்டே சீனாவிடம் நம் நிலத்தை இழந்துவிட்டோம். அந்த தகவலை திரித்துக்கூறி நாட்டை தவறாக வழிநடத்த முயற்சிகள் நடைபெறுகிறது.

லடாக்கின் பன்காங் டிசோ பகுதியில் சீனா பாலம் கட்டியுள்ளது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் அவரது கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், பாலம் கட்டிய இடம் சீனா 1958ம் ஆண்டு கைப்பற்றிய இடம். அந்த இடத்தை 1962ம் ஆண்டு சீனா மீண்டும் கைப்பற்றியது. ஷெக்ஸ்கம் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா சாலை அமைத்துள்ளது. அது சியாச்சின் பகுதிக்கு அச்சுறுத்தலாக அமையலாம். ஆனால், ஷெக்ஸ்கம் பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியாக இருக்க நேரு அனுமதித்துவிட்டார். அந்த பகுதியை பாகிஸ்தான் கடந்த 1963ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. 1949ம் ஆண்டு நேரு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும், 1963ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் மோடியை பொறுப்பேற்கவைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்