சேலத்தில் நடைபயணமாக சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
சேலம்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
அதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
முன்னதாக தர்மபுரியில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக சேலத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் சேலத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் ஓட்டலில் இரவு தங்கினார்.
இந்நிலையில் இன்று சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடைபயணமாக சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிகாலை நடைப்பயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதல்-அமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.