ஆந்திர முதல்-மந்திரியாக 9ம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு
முதல்-மந்திரி ஜெகன் ரெட்டி, இன்று மாலை 4 மணிக்கு தனது ராஜினாமாவை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.;
அமராவதி,
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டது.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜனதா 10 இடங்களிலும் போட்டியிட்டது.வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தெலுங்கு தேசம்- பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் இருந்தது.
இந்த சூழலில் ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 158 இடங்களில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. மேலும் கூட்டணி இல்லாமல் தனித்து 131 தொகுதிகளில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. 25 மக்களவை தொகுதிகளில் 16-ல் தெலுங்குதேசம் கட்சியும், 21 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்று வரும் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூன் 9-ம் தேதி அமராவதியில் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திரப் பிரதேச சட்டசபையில் மொத்தமுள்ள 175 இடங்களில் 130 இடங்களில் முன்னிலையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி, ஏற்கனவே 2 தொகுதிகளில் வெற்றி பெற்று, முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யிடம் (YSRCP) இருந்து மாநிலத்தை கைப்பற்றும் பாதையில் உள்ளது.
ஆந்திர கவர்னர் அப்துல் நசீரிடம் நேரம் கேட்டுள்ள ஜெகன் ரெட்டி, இன்று மாலை 4 மணிக்கு தனது ராஜினாமாவை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இருவருக்கும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் தனது நன்றியை தெரிவித்தார்.