கடவுள் ராமருக்கு சொந்த ஊரில் 500 ஆண்டுகளுக்கு பின் பிறந்த நாள் கொண்டாட்டம்: அசாமில் பிரதமர் மோடி பேச்சு

அயோத்தி நகரில் உள்ள ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலையின் மீது சூரிய ஒளி இன்று பட்டு பிரகாசித்தது.

Update: 2024-04-17 08:06 GMT

நல்பாரி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அசாமின் நல்பாரி நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். இதனை முன்னிட்டு அசாமுக்கு வருகை தந்த அவரை முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா முறைப்படி வரவேற்றார்.

இதனை தொடர்ந்து பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடும் வெயிலையும் கவனத்தில் கொள்ளாமல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், ஆண், பெண் என பொதுமக்கள் பலரும் திரண்டிருந்தனர்.

நாடு முழுவதும் ராமநவமி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் கடவுள் ராமர் அவதரித்த நிலையில், அயோத்தி நகரில் உள்ள ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலையின் மீது சூரிய ஒளி இன்று பட்டு பிரகாசித்தது. அதற்கேற்ற வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு இருப்பது அதன் சிறப்பு. ராமர் சிலைக்கு சூரிய திலகம் இடும் சடங்கு இன்று நடந்தது.

இதனை குறிப்பிட்டு பிரதமர் மோடி பொது கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினார். அவருடன் சேர்ந்து திரண்டிருந்த பொதுமக்களும் கோஷம் எழுப்பினார்கள்.

இதன்பின் கூட்டத்தில் பேசிய அவர், நாடு முழுவதும் புதிய சூழல் காணப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கு பின்னர், தன்னுடைய சொந்த ஊரில் பிறந்த நாளை கொண்டாடும் சிறப்புரிமையை கடவுள் ராமர் பெற்றுள்ளார் என பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வசதிகள் கிடைப்பதற்கான உத்தரவாதம் ஒன்றை மோடி வழங்கியிருக்கிறார். எந்தவித வேற்றுமையும் இன்றி, அவர்களுக்கான சிகிச்சைக்கு மோடி கவனம் எடுத்து கொள்வார் என்றும் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்