தேர்தல் பணியில் ஈடுபட்ட பி.எஸ்.எப். வீரர் பஸ்சில் மர்ம மரணம்

பி.எஸ்.எப். வீரர் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தபோது, துப்பாக்கி குண்டு வெடித்த சத்தம் கேட்டது என உடனிருந்தவர்கள் கூறியுள்ளனர்.;

Update:2024-04-25 15:00 IST

அகர்தலா,

நாட்டில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, திரிபுரா கிழக்கு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்றவர் ரக்சா நர்கீஸ் கேசவ் (வயது 27). நேற்றிரவு 11 மணியளவில், ரோந்து பணியை முடித்து கொண்டு 22 வீரர்களுடன் முகாமுக்கு திரும்பினார்.

எல்லை பாதுகாப்பு படையில் 199-வது பட்டாலியனை சேர்ந்த அவர் பனிசாகர் பகுதியில் பணியமர்த்தப்பட்டவர். மராட்டியத்தின் லத்தூர் பகுதியை சேர்ந்த அவர், பஸ்சின் பின் சீட்டில் தனியாக அமர்ந்து கொண்டார். இந்நிலையில், அவர் தலையில் குண்டு காயத்துடன் பஸ்சின் தரை பகுதியில் கிடந்துள்ளார்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தபோது, துப்பாக்கி குண்டு வெடித்த சத்தம் கேட்டது என உடனிருந்தவர்கள் கூறியுள்ளனர். சில அடி தூரம் பஸ் சென்று பின்னர் நின்றது. அப்போது, கேசவ் உயிரிழந்து கிடந்துள்ளார். இது தற்கொலையாக இருக்க கூடிய சாத்தியங்களையும் மறுக்க முடியாது. இது விபத்து என்றும் நம்பப்படுகிறது என்று கூறினர்.

பஸ்சில் துப்பாக்கி குண்டு ஏற்றிய ரைபிளுடன், நாள் முழுவதும் பணியில் ஈடுபட்ட களைப்பில், கேசவ் படுத்திருக்க கூடும். அப்போது, பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததும், துப்பாக்கியை சுயநினைவில்லாமல் அழுத்தி, குண்டை வெடிக்க செய்திருக்க வேண்டும். அதனால், அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்க கூடும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

எனினும், எதுவும் இன்னும் முடிவாகவில்லை என்றனர். கேசவின் துப்பாக்கி அவருக்கருகே, திறந்த நிலையிலேயே கிடந்துள்ளது என்றும் போலீசார் கூறியுள்ளனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்