தேர்தலுக்கு பிந்தைய வன்முறை.. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தொண்டர் படுகொலை
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ரவுடிகள் பா.ஜ.க. தொண்டரை கொலை செய்ததாக, பா.ஜ.க.வின் உத்தர் வடக்கு நாடியா பிரிவு தலைவர் குற்றம்சாட்டினார்.;
கொல்கத்தா:
நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. மேற்கு வங்காளத்தில் தேர்தலின்போது ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. சில இடங்களில் பா.ஜ.க. -திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு இடத்தில் வாக்குப்பதிவு எந்திரம், விவிபேட் ஆகியவற்றை குளத்தில் வீசிய நிகழ்வும் அரங்கேறியது.
இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்த பின் நாடியா மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் நடந்த வன்முறையில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பா.ஜ.க. தொண்டர் ஹபிஜுர் ஷேக் நேற்று இரவு சிலருடன் தெருவில் கேரம் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர், ஹபிஜுர் ஷேக் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர் அரிவாளாலும் வெட்டினர். இதில் ஹபிஜுர் ஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹபிஜுர் ஷேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ரவுடிகள் பா.ஜ.க. தொண்டரை கொலை செய்ததாக, பா.ஜ.க.வின் உத்தர் வடக்கு நாடியா பிரிவு தலைவர் அர்ஜுன் பிஸ்வாஸ் குற்றம்சாட்டினார். ஆனால், குடும்ப சண்டை காரணமாக இந்த கொலை நடந்ததாக மாவட்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் ருக்பனூர் ரஹ்மான் தெரிவித்தார்.