'பா.ஜ.க. 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்' - ஜே.பி.நட்டா
மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என ஜே.பி.நட்டா நம்பிக்கை தெர்வித்துள்ளார்.;
புதுடெல்லி,
7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என நம்பிக்கை தெர்வித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜே.பி.நட்டா கூறியிருப்பதாவது;-
"மக்களவை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முறையான ஏற்பாடுகளை செய்து வெற்றிகரமாக வாக்குப்பதிவை நடத்தி முடித்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தேர்தல் பணியில் ஈடுபட்ட லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் வாக்குகளை செலுத்திய அனைத்து வாக்களர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி கடுமையாக உழைத்துள்ளார். மொத்தம் 206 பிரசார பொதுக்கூட்டங்கள், 23 வாகன பேரணிகள் மற்றும் 82 பேட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். மக்கள் இதுவரை உணராமல் இருந்த பல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தியுள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். தேர்தல் சமயத்தில் கடுமையாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்காக மக்கள் வாக்கு செலுத்தியிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். திருப்திபடுத்தும் அரசியல், குடும்ப அரசியல் மற்றும் ஊழல் செய்பவர்களை மக்கள் ஒதுக்கிவிட்டார்கள். இந்த தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். அதே போல் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்."
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.