'அனைத்து இடங்களிலும் தோற்கும் பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் எப்படி வெற்றி பெறும்?' - மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
அனைத்து இடங்களிலும் தோற்கும் பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் எப்படி வெற்றி பெறும்? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுர்கியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இந்த தேர்தலில் 'இந்தியா' கூட்டணிக்கு ஆதரவான சூழலை மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். இது பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் இடையேயான தேர்தல். குறிப்பாக விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றால் மக்கள் இன்று விரக்தியில் உள்ளனர். மேலும், ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியல் சாசனத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடக்கிறது.
தன்னாட்சி அமைப்புகளை பா.ஜ.க. தவறாக பயன்படுத்தி நிர்வாகத்தை நடத்துகிறது. இதன் காரணமாக மக்கள் பா.ஜ.க. மீது கோபமடைந்து 'இந்தியா' கூட்டணியை ஆதரிக்கின்றனர். 'இந்தியா' கூட்டணி பெரும்பான்மையை பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. பா.ஜ.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் வல்லமை 'இந்தியா' கூட்டணிக்கு உள்ளது.
அனைத்து இடங்களிலும் தோற்கும் பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் எப்படி வெற்றி பெறும்? உதாரணமாக, 2019-ல் கர்நாடகாவில் எங்களுக்கு ஒரு இடம் கிடைத்தது. இந்த முறை காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெறும் என்று பிரகலாத் ஜோஷி கூறுகிறார். இது கூடுதலா? அல்லது குறைவா?
எங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளது. கேரளாவிலும் அதிக இடங்களைப் பெறுவோம். மராட்டிய மாநிலத்தில் எங்கள் 'அகாதி' கூட்டணி 50 சதவீதத்துக்கும் அதிகமாக வெற்றி பெறும். எல்லா இடங்களிலும் பா.ஜ.க.வின் தொகுதிகள் குறைந்து வரும்போது அவர்கள் எப்படி அதிகமான இடங்களைப் பெறுவார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ராஜஸ்தானில் நாங்கள் பூஜ்ஜியமாக இருந்தோம். இந்த முறை 7 முதல் 8 இடங்களை பெறப் போகிறோம். மத்திய பிரதேசத்தில் நாங்கள் 2 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அங்கும் எங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். சத்தீஷ்காரிலும் எங்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. 100 சதவீதம் இருந்த இடங்களிலெல்லாம் அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 'இந்தியா' கூட்டணி அதிக இடங்களை பெறப்போகிறது என்பதற்கு போதுமான அறிகுறிகள் உள்ளன."
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.