'பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும்; காங்கிரஸ் கட்சியின் நிலை மேலும் மோசமடையும்"- மத்திய பிரதேச முதல்-மந்திரி
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சியின் நிலை மேலும் மோசமடையும் என்றும் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பேரணியில் மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களைப் போல் 2024 தேர்தலிலும் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். காங்கிரஸ் கட்சி 2014-ல் 115 இடங்களிலும், 2019-ல் 52 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த முறை காங்கிரஸ் கட்சியின் நிலை மேலும் மோசமடையும்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் எங்கள் வாகன பேரணிக்கு ஆதரவளிப்பதை பார்க்கும்போது, நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்பது தெரிகிறது. நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது.
ராகுல் காந்தியின் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எதிர்கட்சியினர், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலையின்மையை ஒழித்துவிடுவோம் என்று கூறுகிறார்கள். ஆட்சிக்கு வருவது குறித்து அவர்களுக்கே சந்தேகம் இருக்கிறது. பா.ஜ.க. இரண்டு முறை பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறது. அதே போல் மூன்றாவது முறையும் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்."
இவ்வாறு மோகன் யாதவ் தெரிவித்தார்.