பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் போட்டியிட அச்சம் ஏன்? - ராகுல் காந்திக்கு குலாம் நபி ஆசாத் கேள்வி

ராகுல் காந்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகிய இருவரும் தங்கள் மூதாதையர்களுக்கு கிடைத்த அரசியல் செல்வாக்கை இருவரும் அனுபவித்து வருகின்றார்கள் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-19 06:33 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். காஷ்மீரை சேர்ந்த இவர் கடந்த 2022-ம் ஆண்டு கட்சியிலிருந்து வெளியேறி ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டி.பி.ஏ.பி) என்ற பெயரில் கட்சி தொடங்கிய அவர், காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் உதம்பூர் மக்களவை தொகுதியில் டி.பி.ஏ.பி வேட்பாளரை ஆதரித்து குலாம் நபி ஆசாத் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, "பாஜக ஆளும் மாநிலங்களில் ராகுல் காந்தி போட்டியிட அஞ்சுவது ஏன்? பா.ஜ.க.வை தீவிரமாக எதிர்ப்பதாக ராகுல் காந்தி பேசி வருகிறார்.

ஆனால், அவரது நடவடிக்கைகள் அதற்கு எதிராக உள்ளன. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை விடுத்து, சிறுபான்மையினர் நிறைந்த கேரளாவின் தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீரின் முக்கிய எதிர்கட்சி தலைவரான உமர் அப்துல்லாவையும் குலாம் நபி ஆசாத் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'ராகுல் காந்தி, உமர் அப்துல்லா ஆகிய இருவரும் அரசியல்வாதிகள் அல்ல. மாறாக இவர்கள் இன்னும் ஸ்பூனில் பால் குடிக்கும் பாலகர்கள். இவர்கள் இதுவரை எந்த தியாகமும் செய்யவில்லை. இந்திரா காந்தி, ஷேக் அப்துல்லா போன்ற தங்கள் மூதாதையர்களுக்கு கிடைத்த அரசியல் செல்வாக்கை இருவரும் அனுபவித்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்