தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆதரவு அலை வீசுகிறது - தந்தி டி.வி.க்கு பிரதமர் மோடி சிறப்பு பேட்டி

தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆதரவு அலை வீசுகிறது என்று தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-04-01 03:03 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலையொட்டி பா.ஜ.க. மூத்த தலைவரும் பிரதமருமான மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்திய அளவில் பிரதமர் மோடி அளித்த முதல் பேட்டி தந்தி டி.வி.க்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி அளித்த பதில்கள் பின்வருமாறு:-

தமிழ்நாட்டில் போட்டியா?

கேள்வி:- நீங்கள் வாரணாசியில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்லப்பட்டன. தமிழ்நாட்டில் போட்டியிட நினைத்தீர்களா? வருங்காலத்தில் வாய்ப்பு இருக்கிறதா?.

பதில்:- நான் எனது வாழ்க்கையில் தேர்தலில் போட்டியிடுவது பற்றி நினைத்ததே இல்லை. திடீரென்று நடந்துவிட்டது. நான் எனது கட்சியின் ஒரு படைவீரன், அவ்வளவுதான். கட்சி என்னை தேர்தலில் போட்டியிட சொன்னது, நான் போட்டியிட்டேன். இவ்வாறு கட்சி என்னை எங்கு போட்டியிடச் சொல்கிறதோ, அங்கு போட்டியிடுகிறேன்.

திறந்த மனதோடு பயணிக்கிறேன்

கேள்வி:- தமிழ்நாட்டில் போட்டியிடுவது பற்றி உங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என எடுத்துக்கொள்ளலாமா?.

பதில்:- என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில், நான் ஒரு திட்டத்தோடு பயணிப்பதில்லை. திறந்த மனதோடு பயணிக்கிறேன். அவ்வாறு இருந்தால், வாழ்க்கை நம்மை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்லும்.

தமிழ்நாட்டு மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது எனது பிரச்சினையல்ல

கேள்வி:- உங்களுடைய பல முயற்சிகளுக்கு பின்னரும், தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை தங்களுக்கு ஒரு தீர்க்கமுடியாத சவாலாக உள்ளது. அது ஏன் என்று நினைக்கிறீர்கள்? இந்த தேர்தலில் அந்த நிலைமை மாறிவருகிறதா?.

பதில்:- நான் அரசியலில் இருக்கிறேன், அதற்காக எல்லா செயல்களையும் அரசியலுக்காகவே செய்வேனா?. வாக்கு பெறுவதற்காக மட்டுமே செயல்படுவேனா?. ஆட்சியில் இருப்பதற்காகத்தான் செய்வேனா? இந்த எண்ணம் எனக்கு பொருந்தாது. நான் நாட்டுக்காக பணிபுரிகிறேன். தமிழ்நாடு என் நாட்டின் மிகப்பெரிய சக்தி. ஆட்சியை யாருக்கு கொடுக்கிறீர்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் தேர்தல், அரசியல், பா.ஜனதா என்ற எண்ணத்திலேயே அளவிடுவது என்னுடைய இந்த வளர்ச்சிப்பணிகளுக்கு செய்யப்படும் அநியாயம். நான் என்னுடைய நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்காக பணிபுரிகிறேன். தமிழ்நாட்டு மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது எனது பிரச்சினையல்ல. அவர்களின் திறமையைப்பற்றி, ஆசைகள் பற்றி, இலக்குகள் பற்றி யோசிக்கிறேன். எனவே தயவு கூர்ந்து, நான் ஏதோ அரசியல் திட்டத்தோடு இங்கு வருகிறேன் என்று சொல்லாதீர்கள்.

தமிழ்நாட்டு மக்கள் மீது அன்பு, பாசம் இருக்கிறது

கேள்வி:- 'நான் இத்தனை நற்செயல்கள் செய்கிறேன். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறார்கள்' என்று சிந்தித்தது உண்டா?

பதில்:- இல்லை. ஒருபோதும் இல்லை. தமிழக மக்கள் மீது எனக்கு எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை, மனத்தாங்கலும் இல்லை. அது இருக்கவும் கூடாது. எனக்கு அவர்கள் மீது அன்பு, பாசம் இருக்கிறது. அவர்களின் பண்பாட்டின்மீது மிகுந்த ஈடுபாடு இருக்கிறது. அந்த அன்பு தான், என்னை அங்கே இழுத்துச் செல்கிறது.

சம்பாதிக்க நினைத்திருந்தால் அண்ணாமலை அ.தி.மு.க.வில் இணைந்திருப்பார்

கேள்வி:- இப்போது தமிழ்நாட்டில் அண்ணாமலை பா.ஜ.க தலைவராக வந்துள்ளார். அவரது தலைமையில் கட்சி வளர்ச்சி அடைவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?.

பதில்:- தமிழகத்தில் பா.ஜ.க. அல்லது பாரதீய ஜனசங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் பணி நடக்கிறது. இதில் பல தலைமுறைகள் பணியாற்றியிருக்கின்றன. அதில் அண்ணாமலையும் ஒருவர். இப்போது அவர் மக்களின் கவனத்தை ஈர்க்கிறார்; குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கிறார்.

நல்ல போலீஸ் அதிகாரி வேலையை உதறிவிட்டு கட்சிப்பணிக்கு வந்திருக்கிறார். நல்ல சமூக பின்னணியும் உள்ளது; சிறந்த உழைப்பாளி. இளவயதுடையவர். அவர் ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என நினைத்திருந்தால், தி.மு.க.வில் இணைந்திருப்பார். அல்லது அ.தி.மு.க.வில் இணைந்திருப்பார்.

பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. வராததால் வருத்தமில்லை

கேள்வி:- இந்த தேர்தலில் நீங்கள் ஒரு கூட்டணியை அமைத்திருக்கிறீர்கள். அ.தி.மு.க. உங்கள் கூட்டணியில் இல்லை என்பதில் வருத்தம் எதுவும் உண்டா?.

பதில்:- வருத்தம் யாருக்காவது இருக்குமானால், அது அ.தி.மு.க.வினருக்குத்தான் இருக்க வேண்டும். பா.ஜ.க. எந்த வருத்தமும் இல்லை. ஜெயலலிதாவின் கனவுகளை சிதைக்கின்ற பாவத்தை செய்பவர்கள்தான், அதற்கு வருத்தப்பட வேண்டும். பா.ஜ.க.வுக்கு வருத்தப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆதரவு அலை

கேள்வி:- தமிழ்நாட்டில் 2 வகையான வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஒன்று தி.மு.க. ஆதரவு. மற்றொன்று தி.மு.க. எதிர்ப்பு. தி.மு.க.வை பிடிக்காத ஒரு வாக்காளர், இந்த முறை அ.தி.மு.க.வை விட்டு, ஏன் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்?.

பதில்:- இந்த முறை பா.ஜ.க.வும், தேசிய ஜனநாயக கூட்டணியும் மிகவும் வலுவாக உள்ளன. எங்களுக்கு கிடைக்கும் வாக்கு யாருக்கும் எதிராக கிடைக்கும் வாக்கு அல்ல; பா.ஜ.க.வுக்கு ஆதரவான வாக்கு. நேர்மறையான வாக்கிற்கு அதிக பலம் உண்டு. இந்த அனைத்து விஷயங்களாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஆதரவான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு பணியாற்றுகிறேனா?

கேள்வி:- எதிர்க்கட்சிகள் உங்களை பற்றி ஒரு குற்றச்சாட்டு வைக்கின்றன. பிரதமர் மோடி ஏழைகளுக்காக பணியாற்றவில்லை. பெரிய கம்பெனிகளுக்காக, கார்ப்பரேட்டுகளுக்காக பணியாற்றுகிறார். அரசு கார்ப்பரேட்டுகளின் அரசாக உள்ளது என்கின்றனர். உங்களின் பதில் என்ன?.

பதில்:- இந்த நாட்டில் 80 கோடி மக்களுக்கு கொரோனா சமயத்தில் இருந்து இன்று வரை இலவச ரேஷன் கிடைக்கிறது. இது நாட்டின் பணக்காரர்களுக்கானது அல்ல. கார்ப்பரேட்டுகளுக்கானது அல்ல. நாட்டின் 50 சதவீத மக்களுக்கு வங்கியில் கணக்கு கிடையாது. நான் வந்த பிறகுதான் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர். இது என்ன கார்ப்பரேட்டுகளுக்கான வங்கி கணக்கா? பணக்காரர்களின் வங்கி கணக்கா? இந்த நாட்டில் 2.50 கோடி மக்களின் வீட்டில் மின்சாரம் கிடையாது. இது கார்ப்பரேட்டுகளின் வீடுகளா? இவை பணக்காரர்களின் வீடுகளா?.

சிந்தனை வறட்சி

நம்முடைய தாய்மார்கள், சகோதரிகள் கழிவறை இல்லாமல் அவதிப்பட்டனர். அதற்காக 11 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டன. பெண்கள் சுயஉதவி குழுவை எடுத்துக்கொள்ளுங்கள். இது 'கார்ப்பரேட்டு'களுடையதா? பணக்காரர்களுடையதா? 10 கோடி பெண்கள் இதில் இணைந்து உள்ளனர். மோடியின் இலக்கு என்னவென்றால், 3 கோடி சுயஉதவி குழு பெண்களை லட்சாதிபதிகள் ஆக்க வேண்டும் என்பதுதான். இதெல்லாம் 'கார்ப்பரேட்டு' விஷயமா? இவர்கள் பணக்காரர்களா?.

இந்த நாட்டில் 80 சதவிகித வீடுகளில் உள்ளவர்கள் குடிநீருக்காக எங்கோ அலைய வேண்டியிருந்தது. இன்று குழாய் மூலம் குடிநீர் சுமார் 12 கோடி வீடுகளுக்கு தரப்பட்டு உள்ளது. வீட்டில் கியாஸ் அடுப்பு எரிகிறது. என்னால் இதுபோன்ற 100 விஷயங்களை, இந்த நாட்டு ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களை பட்டியலிட முடியும். எனவே, எதிர்க்கட்சிகளுக்கு சிந்தனை வறட்சி என்றால் நான் எதுவும் செய்ய முடியாது.

விசாரணை அமைப்புகளை ஆயுதங்களாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறீர்களா?

கேள்வி:- எதிர்க்கட்சிகளின் மற்றொரு குற்றச்சாட்டு, நீங்கள் சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவற்றை ஆயுதங்களாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறீர்கள் என்பதுதான்.

பதில்: அமலாக்கத்துறை எங்களால் உருவாக்கப்பட்டதா?, பண மோசடி தடுப்பு சட்டம் நாங்கள் கொண்டுவந்ததா? இல்லை. அமலாக்கத்துறை என்ன வேலை செய்கிறது?. அது ஒரு சுதந்திரமான அமைப்பு. சுதந்திரமாக பணியாற்றுகிறது. நாங்கள் அதனை தடுப்பதும் இல்லை; அதனை அனுப்புவதும் இல்லை. அது சுதந்திரமாக பணியாற்ற வேண்டும். கோர்ட்டுகளின் தராசுகளால் அது மதிப்பிடப்படும். அதோடு எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.

இப்போது அமலாக்கத்துறையிடம் சுமார் 7 ஆயிரம் வழக்குகள் உள்ளன. அதில் அரசியல்வாதிகளோடு தொடர்புடைய வழக்குகள் 3 சதவீதத்துக்கும் குறைவானவை.

பணம் எங்கிருந்து வந்தது?

கேள்வி:- சமீபத்தில் வெளியாகியுள்ள தேர்தல் பத்திர விவரங்களால், பா.ஜனதாவுக்கு கெட்ட பெயர் வந்துள்ளது என நீங்கள் நினைக்கிறீர்களா?.

பதில்:- எனக்கு பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன் என்று கொஞ்சம் சொல்லுங்கள்?. இன்று மோடி தேர்தல் பத்திரங்களை உருவாக்கி உள்ளார்; அதனால்தான் உங்களால் அதைப்பற்றி தேட முடிகிறது. பணம் யார் கொடுத்தது, யார் வாங்கினார்கள் என்பதையெல்லாம் உங்களால் அறிய முடிகிறது. இல்லையென்றால் யாருக்கு பணம் எங்கிருந்து வந்தது என தெரியாது.

வாரிசு அரசியல் எது?

கேள்வி:- நீங்கள் எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் பற்றி பேசுகிறீர்கள். இந்த குற்றச்சாட்டு மக்களிடம் எடுபடுமா? வாரிசு அரசியல் இந்தியா மட்டுமல்ல, தெற்கு ஆசியா முழுவதும் உள்ளது. இதனை மக்கள் பொருட்படுத்துகிறார்களா?.

பதில்:- ஒரு குடும்பத்தில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அரசியலில் இருந்தால், நான் அதனை வாரிசு அரசியல் என ஒருபோதும் சொல்லவில்லை. அதிக அளவில் மக்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு குடும்பத்தில் இருந்து 10 பேர் கூட அரசியலுக்கு வந்தாலும் நான் அதை கெடுதல் என சொல்லவில்லை. ஆனால், ஒரு அரசியல் கட்சியையே ஒரு குடும்பம் நடத்தும்போது, அந்த குடும்பம் மட்டுமே எல்லா முடிவுகளையும் எடுக்கும்போது, கட்சியில் அடுத்த தலைமுறை அந்த குடும்பத்தில் இருந்தே வரும்போது, அது ஒரு குடும்ப அரசியல் கட்சி. இதில் ஜனநாயகம் இல்லை. இதனால் அந்த கட்சியில் எத்தனை அறிவாளிகள், திறமையுள்ளவர்கள் இருந்தாலும் அவர்கள் மேலே வருவதில்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. நாட்டின் முடிவு நாட்டின் இளைஞர்களால் எடுக்கப்படும். நாட்டின் கிராமங்களால், நாட்டின் விவசாயிகளால் எடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அது குடும்ப அரசியலில் நடப்பதில்லை.

தி.மு.க.வுக்கு என்னுடைய செய்தி எதுவும் இல்லை

கேள்வி:- தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியான தி.மு.க.வுக்கு உங்கள் செய்தி என்ன?.

பதில்:- அவர்களுக்கு என்னுடைய செய்தி எதுவும் தேவை இல்லை என்று நினைக்கிறேன். தமிழக மக்களே அவர்களுக்கு ஒரு கடுமையான செய்தியை சொல்லப்போகிறார்கள்.

மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்

கேள்வி:- நீங்கள் 400-க்கும் அதிகமான இடங்கள் என்ற இலக்கை வைத்திருக்கிறீர்கள். 10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு இது சாத்தியமா? அதீதம் இல்லையா?.

பதில்:- இதை இந்த நாட்டின் மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள், நான் இல்லை. பல நாட்களுக்கு முன்னரே முடிவு செய்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டின் திறமை முக்கியம்

கேள்வி:- இந்த 400-க்கும் மேல் என்ற இலக்கில், தென் இந்தியாவில் இருந்து எத்தனை இடங்கள் கிடைக்கும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?.

பதில்:- முதல் விஷயம் எங்களுக்கு நாடு முழுவதும் இருந்து மக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற நாங்கள் எப்போதும் எங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். எங்களுடைய கவனம் எல்லாம் அதிலேதான் இருக்கிறது.

நாட்டின் மிகத் திறமைவாய்ந்த மாநிலம் தமிழ்நாடு

கேள்வி:- தமிழ்நாட்டில் இருந்து உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் காலம் வரும் என்று நினைக்கிறீர்களா?.

பதில்:- நான் தேர்தல் சிந்தனையில் தமிழ்நாட்டைப் பார்ப்பதில்லை. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு இந்த நாட்டின் மிகத் திறமைவாய்ந்த மாநிலம். அதன் மொழி, பண்பாடு சிறப்பு வாய்ந்தவை. எனக்கு வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு தமிழ்நாட்டின் திறமை மிகவும் முக்கியம். அதுதான் என் கனவு.

தமிழ்நாட்டுக்கு அனைத்து துறைகளிலும் உத்தரவாதம்

கேள்வி:- மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டுக்கு மோடியின் உத்தரவாதம் என்ன?.

பதில்:- வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு, வளர்ச்சியடைந்த தமிழ்நாடு. சுயசார்பு இந்தியாவுக்காக, மிகப்பெரிய பாதுகாப்பு முனையம் இங்கே அமையும். இது என்னுடைய மிகப்பெரிய உத்தரவாதம். அண்மையில் தூத்துக்குடியில் ஒரு துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். வருங்காலத்தில் இது துறைமுகத் துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவர உள்ளது. சுற்றுலாத்துறையில் பார்த்தால், அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வரும் மாநிலம் தமிழகம். இந்தியாவில் சுற்றுலாத்துறை பெரும் வளர்ச்சி அடைய உள்ளது. இவ்வாறு நான் தமிழ்நாட்டுக்கு அனைத்து துறைகளிலும் உத்தரவாதம் அளிக்க முடியும்.

இவ்வாறு பிரதமர் அவர் கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்