பா.ஜனதாவுக்கு '440 வோல்ட்' அதிர்ச்சி கொடுங்கள் - அபிஷேக் பானர்ஜி அழைப்பு

400 இடங்களுக்கு மேல் இலக்கு வைத்திருக்கும் பா.ஜனதாவுக்கு '440 வோல்ட்' அதிர்ச்சி கொடுக்குமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-04-20 23:49 GMT

கோப்புப்படம்

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 400-க்கு மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்கு வைத்து பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பணியாற்றி வருகிறது. ஆனால் பா.ஜனதாவின் இந்த இலக்கு நிறைவேறாது என எதிர்க்கட்சிகள் உறுதியாக கூறி வருகின்றன.

அந்தவகையில் மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசும், பா.ஜனதாவுக்கு இந்த முறை பெரும் ஏமாற்றமாக அமையும் என கூறியுள்ளது.

அங்குள்ள ரைகஞ்ச் தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, "நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை 400-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், பா.ஜனதாவுக்கு 440 வோல்ட் அதிர்ச்சியை கொடுங்கள். அதன் அதிர்வுகள் டெல்லியை குலுங்கச் செய்யும். பா.ஜனதா ஆட்சி அகற்றப்படும்.பா.ஜனதா எப்போதும் பிரித்தாளும் அரசியலை செய்கிறது. அதற்கு தகுந்த பதிலடியை மக்கள் கொடுக்க வேண்டும்.கடந்த 2019 தேர்தலில் ரைகஞ்ச் தொகுதியில் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் வாக்குகளை பிரித்ததால், பா.ஜனதா இங்கே வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை அப்படி நடக்கக்கூடாது.

இந்த தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற தேபஸ்ரீ சவுத்ரி, கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை. இதில் 2 ஆண்டுகள் அவர் மத்திய மந்திரியாகவும் இருந்தார். ஆனாலும் தொகுதி வளர்ச்சிக்காக ஒரு காசு கூட செலவழிக்கவில்லை.

மாநில பா.ஜனதாவில் இருந்து ஏராளமானோர் விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைகிறார்கள். எனவே திரிணாமுல் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதாக நினைக்காதீர்கள். பிற கட்சிகளை உடைக்க பா.ஜனதாவுக்கு தெரியும் என்றால், அதைப்போன்ற திறமை திரிணாமுல் காங்கிரசுக்கும் உண்டு" என்று அபிஷேக் பானர்ஜி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்