நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 200 இடங்களை தாண்டப்போவதில்லை - காங்கிரஸ் கடும் தாக்கு
காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.;
திருவனந்தபுரம்,
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மக்களிடையே சிறப்பை பெற்றுள்ளது. கேரளாவுக்கு பிரதமர் மோடி வரும்போது கேரளாவை புகழ்ந்து பேசுகிறார். வட இந்தியாவில் இருக்கும்போது தென்னிந்தியாவை விமர்சிக்கிறார். தென்னிந்தியாவில் பா.ஜ.க.வின் நோக்கம் பலிக்கப்போவதில்லை.
பா.ஜ.க.வின் 'ஜூம்லா'வை, மக்கள் உணர்ந்து வருகின்றனர். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மணிப்பூரில் நிலவும் அமைதியின்மை குறித்து பிரதமரிடம் கேள்விகள் கேட்கப்பட்டால், அவர் அமைதியாக இருக்கிறார்.
தேர்தலுக்கு முன்பே தாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம் என்று பா.ஜ.க. கூறி வருகிறது. ஆனால் பா.ஜ.க. 200 இடங்களை தாண்டப்போவதில்லை. ஜனநாயகத்தில் யாராலும் எதையும் கணிக்க முடியாது. ஏனெனில் இங்கு மக்கள்தான் எஜமானர்கள். இவ்வாறு அவர் கூறினார்.