நாடாளுமன்ற தேர்தல் மேலும் 11 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து அமிர்தசரஸ் தொகுதியில் களம் காண்கிறார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் மேலும் 11 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை நேற்று கட்சி மேலிடம் வெளியிட்டது.
இந்த பட்டியலில் பஞ்சாப்பில் 6, மேற்கு வங்காளத்தில் 2, ஒடிசாவில் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முக்கியமாக அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து அமிர்தசரஸ் தொகுதியில் களம் காண்கிறார். மாநிலத்தின் பரித்கோட் தொகுதியில் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் கடந்த தேர்தலில் வடமேற்கு டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
பர்ட்டுகாரி மக்தாப் கட்டாக் தொகுதியிலும், ரவ்நீத் சிங் பிட்டு லூதியானா தொகுதியிலும், சுசில்குமார் ரிங்கு ஜலந்தர் தொகுதியிலும், பிரநீத் கவுர் பாட்டியாலா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் 4 பேரும் மாற்று கட்சிகளில் இருந்து விலகி பா.ஜனதாவில் ஐக்கியமானவர்கள் ஆவர்.
இந்த 11 பேரையும் சேர்த்து மொத்தம் 411 தொகுதிகளுக்கு இதுவரை பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.