பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறது - பிரியங்கா காந்தி
அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி மக்களின் உரிமைகளை பறிக்க பா.ஜனதா அரசு விரும்புவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடினார்.;
ராய்ப்பூர்,
18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 2-ம் கட்ட தேர்தலில் சத்தீஷ்கார் மாநிலத்தின் காங்கர் மக்களவை தொகுதிக்கு வருகிற 26-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் காங்கர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரேஷ் தாகூரை ஆதரித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று அங்கு பிரசாரம் செய்தார்.
பலோட் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "அரசியலமைப்பு உங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியுள்ளது; இடஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது; பழங்குடியினரின் கலாசாரத்தை பாதுகாப்பதை உறுதி செய்துள்ளது; தலித்துகளின் வளர்ச்சியை எளிதாக்கியுள்ளது. ஆனால் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி மக்களின் உரிமைகளை பறிக்க விரும்புகிறது.
அரசியலமைப்பில் ஏற்படும் எந்த மாற்றமும் அனைவரையும் பாதிக்கும். கேள்விகள் கேட்பது உட்பட அவர்களின் உரிமைகள் இழக்கப்படுவதால், மக்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ முடியாமல் போகும். பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் நோக்கம் சரியானதல்ல.
அரசியலைக் காட்டுவது, நாட்டில் பிரபலமடைந்துவிட்டது. இன்று, ஒரு தலைவர் பூஜை செய்யும்போது, கேமரா இருக்க வேண்டும், அதை தொலைக்காட்சியில் காட்ட வேண்டும் என்கிற நிலை உள்ளது.இந்திரா காந்தி (முன்னாள் பிரதமர்) சடங்குகள் செய்ய ஒரு பூஜை அறை இருந்தது. ஆனால் அவர் அதை தனிமையில் செய்தார். அதை வெளிக்காட்டிக் கொள்ள அல்ல. மதத்தை அரசியலில் பயன்படுத்தக்கூடாது. அது நமது பாரம்பரியம் அல்ல.பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு, பிரதமர் மோடியின் சில தொழிலதிபர் நண்பர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. இது உங்களுக்காக (குடிமக்கள்) வேலை செய்திருந்தால், உங்கள் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டிருக்கும். மோடியின் அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. உங்கள் வாழ்க்கை மாறிவிட்டதா?
பிரதமர் மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவராக மாறிவிட்டார் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர். அப்படி இருந்தால் அவர் ஏன் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கவில்லை? பணவீக்கத்தை ஏன் கட்டுப்படுத்தவில்லை?தொழிலதிபர் நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை பிரதமர் தள்ளுபடி செய்தார்" என்று அவர் கூறினார்.