'ஒடிசாவையும், பூரி ஜெகன்நாதரையும் பா.ஜ.க. அவமதித்துவிட்டது' - ராகுல் காந்தி
ஒடிசாவையும், பூரி ஜெகன்நாதரையும் பா.ஜ.க. அவமதித்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.;
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் பூரி மக்களவை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சம்பித் பத்ரா, அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்' என்று கூறினார். அவர், 'பிரதமர் மோடி பூரி ஜென்நாதரின் பக்தர்' என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஸ்ரீ ஜெகன்நாதர் இந்த பிரபஞ்சத்தின் கடவுள். அவர் ஒடிசாவின் பெருமைக்குரிய அடையாளம் ஆவார். அவரை ஒரு மனிதரின் பக்தர் என்று கூறுவது மிகப்பெரிய அவதூறாகும். இது மிகவும் கண்டனத்திற்குரியது" என்று பதிவிட்டார். இதனிடையே தனது தவறுதலான கருத்துக்கு பூரி ஜெகன்நாதரிடம் மன்னிப்பு கோரி 3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக சம்பித் பத்ரா தெரிவித்தார்.
இந்த நிலையில், ஒடிசாவையும், பூரி ஜெகன்நாதரையும் பா.ஜ.க. அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
"பூரி ஜெகன்நாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்று கூறி ஒடிசா மக்களையும், பூரி ஜெகன்நாதரையும் பா.ஜ.க. அவமதித்துள்ளது. நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அழிக்க பா.ஜ.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. பூமியில் உள்ள எந்த சக்தியாலும் நமது அரசியலமைப்பை அழிக்க முடியாது."
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.