'5 கட்ட தேர்தலில் பா.ஜனதா 310 இடங்களை கைப்பற்றியுள்ளது' - அமித்ஷா
5-ம் கட்ட தேர்தலின் முடிவில் பா.ஜ.க. ஏற்கனவே 310 இடங்களை கைப்பற்றியுள்ளது என அமித்ஷா தெரிவித்தார்.;
புவனேஸ்வர்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட தேர்தல் வரும் 25-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என பா.ஜனதா கூறி வருகிறது.
இந்த நிலையில், இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட தேர்தல்களில் பா.ஜனதா 310 இடங்களை கைப்பற்றியுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
"5-ம் கட்ட தேர்தலின் முடிவில் பா.ஜ.க. ஏற்கனவே 310 இடங்களை கைப்பற்றியுள்ளது. 6-வது மற்றும் 7-வது கட்ட தேர்தல்களுக்குப் பிறகு 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம்.
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஆற்றல்மிக்க, கடினமாக உழைக்கக் கூடிய மண்ணின் மகனை மாநிலத்தின் முதல்-மந்திரியாக்குவோம். ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் அதிகாரிகளின் ஆட்சியை நடத்தி வருகிறார். மாநிலத்தின் கலாசாரத்தையும், பெருமையையும் அவர் சீர்குலைத்து வருகிறார்.
ஒடிசாவின் மக்கள் தங்கள் வளமான கலாசாரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் பா.ஜ.க. ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். பூரி ஜெகன்நாதர் கோவிலை வணிக மையமாக மாற்ற பிஜு ஜனதா தளம் கட்சி விரும்புகிறது. கோவிலின் 4 கதவுகள் பொதுமக்களுக்காக திறக்கப்படவில்லை. உலகப் புகழ் பெற்ற ஜெகநாதரின் ரத யாத்திரையை நிறுத்தவும் சதித்திட்டம் தீட்டப்பட்டது.
ஒடிசாவின் கனிம வளங்களை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கொள்ளையடித்து வருகிறார். ஒடிசாவில் வளமான கனிம வளங்கள் உள்ளன. ஆனால் அந்த வளங்களை பாதுகாக்கக்கூடிய முதல்-மந்திரி இங்கு இல்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சம்பல்பூரில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.