இந்த விஷயத்தில் காங்கிரஸ் செய்ததையே பா.ஜ.க.வும் செய்கிறது.. மாயாவதி விமர்சனம்

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்பட்டால் பா.ஜ.க. வெற்றி பெறுவது எளிதானது அல்ல என மாயாவதி தெரிவித்தார்.

Update: 2024-04-28 12:52 GMT

மொரேனா :

மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி கலந்துகொண்டு பேசியதாவது:-

காங்கிரஸ் இதற்கு முன்பு செய்தது போலவே பா.ஜ.க.வும் புலனாய்வு அமைப்புகளை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதுபோல் தெரிகிறது. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி ஆகியவற்றை கட்டுப்படுத்த பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. இவை எல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர்ந்துள்ளன. மத்திய அரசு மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குகிறது, ஆனால் வேலைவாய்ப்பை உருவாக்குவதே ஏழ்மையை அகற்றுவதற்கான தீர்வு ஆகும்.

ஊழல் குறையவில்லை, நாட்டின் எல்லைகள் முற்றிலும் பாதுகாப்பாக இல்லை. இது கவலைக்குரிய விஷயமாகும். பா.ஜ.க. மற்றும் காங்கிரசை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு நீங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்பட்டாலோ, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யவில்லை என்றாலோ பா.ஜ.க. வெற்றி பெறுவது எளிதானது அல்ல.

பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் இன்றும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஆனால், தனது பலத்தையும் நேரத்தையும் செலவழித்து, அவர்களுக்கு வேண்டப்பட்ட முதலாளிகள் மற்றும் பணக்காரர்களுக்கு லாபம் ஈட்டி கொடுக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்