பாஜக தேர்தல் அறிக்கை தகர டப்பா உருட்டல் சத்தம் - இரா.முத்தரசன் தாக்கு
பாஜக தேர்தல் அறிக்கை கண்கட்டி ஏமாற்றும் வித்தை விளையாட்டாக அமைந்துள்ளது என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாஜக தேர்தல் அறிக்கை 2024 "உறுதி அறிக்கை (சங்லாப் பத்ரா)" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மக்கள் கண்கட்டி ஏமாற்றும் வித்தை விளையாட்டாக அமைந்துள்ளது. நாட்டின் ஜனநாயக அரசியல் அமைப்பை பலவீனப்படுத்தியுள்ள பிரதமர் மோடி, அரசியல் அமைப்பு சட்டத்தை சிறுமைப்படுத்தி, சிதைத்து விட்டு, தற்போது தனி மனிதனாக நின்று "மோடியின் உத்தரவாதம்" என்று பேசும் பேராபத்தை தேர்தல் அறிக்கை வெளிப்படுத்துகிறது.
கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பாஜகவும், மோடியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வேலையின்மை பெருகியுள்ளது, விலைவாசி அதிகரித்துள்ளது, சிறு, குறு தொழில்கள் நசிந்து நாசமாக்கப்பட்டுள்ளது, வறுமை நிலை, கொடிய பட்டினி நிலை வாழ்க்கையாக மாறியுள்ளது. 2014, மற்றும் 2019 ஆண்டுகளில் கூறிய உறுதிமொழிகள் ஆண்டுக்கு 2 கோடி வேலை, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு, கருப்புப் பணத்தை மீட்டு குடிமக்களுக்கு வழங்குதல் போன்ற வாக்குறுதிகள் கைவிடப்பட்டதைபோல், ஏழை மக்களும் அடித்தட்டு மக்களும் கைவிடப்பட்டுள்ளனர்.
பாஜக தேர்தல் அறிக்கை ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தி வரும் வேலைத் திட்டத்தை செயல்படுத்த முனைப்புக் காட்டுகிறது. அது நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும். மனிதர்களை பிளவுபடுத்தும், மதச் சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் போன்றோர் மீது வன்தாக்குதல் நடத்தும் தீய நோக்கம் கொண்டது.
பாஜக தேர்தல் அறிக்கை தொழிலாளர் வேலை உரிமைகள், பெண்களின் வேலைவாய்ப்பு வீழ்ச்சி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவைகள் குறித்து வாய்திறக்கவில்லை. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் போன்ற உணர்ச்சிகளை தூண்டும் பிரச்சினைகளில் தீவிரம் காட்டுகிறது. விவசாயிகள் விளைவிக்கும் பயிர்கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதர விலையும், கடன் நிவாரணமும் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் வாழ்க்கை பிரச்சினைகளையும், நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டம் எதுவும் இல்லாத பாஜக தேர்தல் அறிக்கை அடுக்கி வைக்கப்பட்ட தகர டப்பாக்கள் சரிந்து விழும் போது எழுகின்ற காதை செவிடாக்கும் வெற்று சத்தமே தவிர வேறு ஒன்றுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.