மாவட்ட தலைவர்களுடன் பா.ஜனதா ஆலோசனை கூட்டம்
அமைந்தகரையில் உள்ள பா.ஜனதா மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.;
சென்னை,
இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், முதல்கட்டமாகவே தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. நாடு முழுவதும் தற்போது வரை 6 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் குறித்து பா.ஜனதா நாடாளுமன்ற மைய குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள பா.ஜனதா மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தல் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் பங்கேற்கிறார்கள். கூட்டத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் பணி செயல்பாடுகள் குறித்தும், கள நிலவரம், தேர்தல் முடிவுக்கு பிறகான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.