தமிழகத்தில் அனைத்து பா.ஜ.க. வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி புகார்
எனக்கு நெருக்கடி கொடுக்க சிலர் என்னை டார்கெட் செய்கின்றனர் என்று திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.10 மணிக்கு வழக்கம்போல் எழும்பூரில் இருந்து புறப்பட்டது. அந்த ரெயிலில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தேர்தல் செலவிற்கான பணம் கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து, இரவு 8.35 மணியளவில் எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு ரெயில் வந்தபோது அதில் ஏறிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 3 பயணிகளின் சூட்கேஸ்களில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பின்னர், அந்த 3 பேரையும் உடனடியாக பணத்துடன் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், பணத்தை எண்ணியபோது அதில் 3 கோடியே 99 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், நெல்லை எக்ஸ்பிரசில் பணத்துடன் பிடிபட்டது புரசைவாக்கம் தனியார் விடுதி பா.ஜ.க. உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்தது. நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நெல்லையில் பணப்பட்டுவாடா செய்ய பணம் எடுத்து சென்றதாக பிடிபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே, திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் நெல்லை மேலப்பாளையத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் கணேஷ் என்பவரது வீட்டில் ரூ.2 லட்சம், வேட்டி- சேலைகள், மது பாட்டில்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறையினர்தான் விசாரணை செய்வார்கள். பறிமுதல் தொடர்பான அனைத்து தகவலும் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் உரிய விசாரணை மேற்கொள்வார்கள் என்றார்.
இந்தநிலையில், தி.மு.க.,வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ‛‛நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என்றும் அனைத்து பா.ஜ.க., வேட்பாளர்களின் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்'' என தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்து உள்ளார். மேலும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல கோடி ரூபாய் பணம் ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்று புகாரில் கூறியுள்ளார்.
பணம் பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் கூறுகையில்,
எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்தப்பணம் எனக்கு சொந்தமானது இல்லை. எனக்கு நெருக்கடி கொடுக்க சிலர் என்னை டார்கெட் செய்கின்றனர். என்னை குறி வைக்கின்றனர் என்பது மட்டும் தெரிகிறது. எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதால், அதை பொறுத்து கொள்ள முடியாமல் பல நடவடிக்கைகள் எடுக்கின்றனர். மக்களை திசைதிருப்ப தி.மு.க.,வினர் செய்த வேலை இது. எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. வெற்றி உறுதியாகிவிட்டது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.