வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பா.ஜ.க.வினர் முயற்சி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பணம் பட்டுவாடா விவகாரம் குறித்து நேர்மையான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

Update: 2024-04-01 11:18 GMT

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் 'இந்தியா' கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வை.செல்வராஜ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இத்தொகுதியில் பா.ஜ.க.வும் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அதன் மூலம் வாக்குகளை பெறும் முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது.

இன்று காலை 9.00 மணி அளவில் நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் இயங்கி வரும் சாய் டொமஸ்டிக் கேஸ் சப்ளையர் மற்றும் நீலா மேல வடம்போக்கி தெருவில் இயங்கி வரும் பார்வதி இந்தியன் கேஸ் நிறுவனத்தில், வாடிக்கையாளர்கள் பெரும் கூட்டமாக நிற்பதாக செய்திகள் வந்தது. இது குறித்து விசாரித்தபோது, வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் கார்டுகளை தங்கள் கேஸ் இணைப்புகளுடன் இணைக்க வேண்டும்.

அவ்வாறு இணைத்தால், உடனடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு ரூபாய் 300 மானியமாக மத்திய பா.ஜ.க. அரசிடம் இருந்து கிடைக்கும் என்று கூறப்பட்டதாக வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது உண்மைக்கு புறம்பானது . அவ்வாறு மானியம் எதுவும் வழங்கப்படவில்லை. அப்படியே, மானியம் வழங்கப்படுவதாக இருந்தாலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இது போன்று பொதுமக்களிடையே மறைமுக ஆதரவு தேடுவது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.

இதற்குப் பின்னணியில் பா.ஜ.க.வினர் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இது குறித்து உடனடியாக தேர்தல் ஆணையம் நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல் முறைகேடுகள் மற்றும் பணப் பட்டுவாடா செய்யும் முயற்சிகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கடிதம் அனுப்பியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்