பா.ஜ.க.வையும், அ.தி.மு.க.வையும் ஒருசேர வீழ்த்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க.வையும், அ.தி.மு.க.வையும் ஒருசேர வீழ்த்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-17 07:12 GMT

சென்னை,

திமுக ஆட்சியின் திட்டங்களை பட்டியலிட்டு, வேட்பாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வணக்கம் நல்லா இருக்கீங்களா?

ஏப்ரல் 19-ம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிற நாள், நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் வாக்கு கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை நாசமாக்கிய பாசிச பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடக்கின்ற தேர்தல்.

சாதி, மதம் கடந்து மக்களை ஒற்றுமையாக வாழ உங்கள் வாக்குதான் வலிமையான ஆயுதம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன் என்பது உங்களுக்கு தெரியும். மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து சேவை, காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்.

நாட்டை காக்க, நாளைய தலைமுறையை காக்க இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும், தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒருசேர வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்க, தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருக்கும், உங்கள் திராவிட அரசின் சாதனைகள் இந்தியா முழுக்க எதிரொலிக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்