டெல்லியில் இன்று நடக்கிறது "இந்தியா கூட்டணி"யின் பிரமாண்ட பொதுக்கூட்டம்

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மெகா பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Update: 2024-03-30 23:53 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மெகா பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), திருச்சி சிவா (தி.மு.க.), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), ஜார்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன், முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "டெல்லியில் நாளை (இன்று) நடைபெறும் பொதுக்கூட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கானது அல்ல. அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கானது. அதனால்தான் இதை ஜனநாயகத்தை காப்பாற்றும் பொதுக்கூட்டம் என அழைக்கிறோம்.

மேலும் இந்த பொதுக்கூட்டம் எந்த ஒரு கட்சியின் கூட்டமும் அல்ல. சுமார் 28 கட்சிகள் இதில் ஈடுபடுகின்றன. இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையையும், ஆதரவையும் பற்றிய வலுவான செய்தியை இந்த கூட்டம் ராம்லீலா மைதானத்தில் இருந்து லோக் கல்யாண் மார்க்குக்கு (பிரதமர் இல்லம்) அறிவிக்கும்.

விலைவாசி உயர்வு, 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்ட விகிதம் உயர்வு, பொருளாதார பாகுபாடுகள், சமூக பிளவுகள், விவசாயிகளுக்கான அநீதி போன்றவை இந்த கூட்டத்தில் எழுப்பப்படும்.

எதிர்க்கட்சிகளை குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது மற்றொரு பிரச்சினையாக முன்வைக்கப்படும். எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக குறிவைக்கும் முயற்சியில் 2 முதல்-மந்திரிகள் மற்றும் பல மந்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது, எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் முடக்குவதற்கு பிரதமர் விரும்புவதை காட்டுகிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் காங்கிரசை வரி பயங்கரவாதத்தால் குறிவைப்பது போன்ற பிரச்சினைகளும் பொதுக்கூட்டத்தில் எழுப்பப்படும். எங்களுக்கு மேலும் 2 வருமான வரித்துறை நோட்டீசுகள் வந்துள்ளன. இந்த பொதுக்கூட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் அரசியலமைப்பைப் பாதுகாப்பதாகும். பா.ஜனதா தலைவர்கள் அதை மாற்றி எழுத விரும்புவதால், அது ஆபத்தில் இருக்கிறது" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்