ஸ்மிரிதி இரானிக்கு பின்னடைவு; காங்கிரசின் கிஷோரி லால் 1 லட்சம் வாக்குகள் முன்னிலை

1 லட்சம் வாக்குகள் முன்னிலை வகிக்கும் கிஷோரி லால் சர்மாவுக்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.;

Update:2024-06-04 15:37 IST

அமேதி,

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக ஸ்மிரிதி இரானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் கிஷோரி லால் சர்மா போட்டியிட்டார்.

இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில் தொடக்கம் முதல், காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து பல சுற்றுகளின் முடிவில், கிஷோரி லால் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இரானி தோல்வி அடைய கூடிய சூழல் காணப்படுகிறது. இதனால், பா.ஜ.க. பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது.

80 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக அமேதி பார்க்கப்படுகிறது.

கடந்த முறை 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில், இரானி அதிரடியாக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராகுல் காந்தியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

பா.ஜ.க.வில் தேசிய பொது செயலாளர், மகளிரணியின் தேசிய தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த இரானி, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஜவுளி துறைக்கான மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவருடைய தோல்வி பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிஷோரி லாலுக்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அண்ணா, நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. உங்களுக்கு மனப்பூர்வ வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்