'நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது' - பிரதமர் மோடி
தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்தார்.;
சண்டிகர்,
அரியானா மாநிலம் பிவானி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"மேற்கு வங்காளத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களுக்கும் ஓ.பி.சி. சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். கடந்த 10-12 ஆண்டுகளில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்கள் செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்களின் மனநிலையை பாருங்கள், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஐகோர்ட்டின் உத்தரவை ஏற்றுக்கொள்ளாமல் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்குவேன் என்கிறார்.
'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகளுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் இன்று நான் உறுதியளிக்கிறேன், நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது. நான் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலாளியாக இருப்பேன். இது அரசியல் பேச்சு அல்ல, எனது வாக்குறுதி.
'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த நாட்டை விட தங்கள் வாக்கு வங்கிதான் மிகவும் முக்கியம். தங்கள் வாக்கு வங்கிக்காக அவர்கள் மக்களை பிரிக்கிறார்கள்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.