அண்ணாமலை வேட்புமனு சர்ச்சை - தேர்தல் அதிகாரி விளக்கம்
கோவையில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அண்ணாமலையின் வேட்புமனு ஏற்புக்கு தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.;
கோவை,
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
வேட்புமனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று பரிசீலனை செய்தனர். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். கோவையில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அண்ணாமலையின் வேட்புமனு ஏற்புக்கு தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்த எதிர்ப்பை மீறி அண்ணாமலையின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதையடுத்து அண்ணாமலையின் வேட்பு மனு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க புகார் மனு கொடுத்துள்ளது. அதில், வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது Non Judicial பத்திரத்தில்தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால் தேர்தல் ஆணையம் அனுமதிக்காத Court Fee பத்திரத்தை பயன்படுத்தி அண்ணாமலை வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். இது அப்பட்டமான விதிமீறல். தேர்தல் ஆணையம் இதனை ஆய்வு செய்து அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
கோவையில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை எண் 17, எண் 27 என இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார். எண் 17 வேட்புமனு Court Fee பத்திரத்தில் கையெழுத்து இல்லாமல் இருந்ததால் அது நிராகரிக்கப்பட்டது. மேலும் எண் 27 வேட்புமனுவானது Non Judicial பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டதால் அந்த மனு ஏற்கப்பட்டது" என்ற கூறியுள்ளார்.