அமேதி, ரேபரேலி... எந்த தொகுதியில் போட்டி? ராகுல் காந்தி பதில்

ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.

Update: 2024-04-17 05:46 GMT

காசியாபாத்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

இதில், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட விவகாரத்தில் இருந்து திசை திருப்பும் வேலையில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது என ராகுல் காந்தி கூறினார். பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என்றும் கூறினார். அவரிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது. எனக்கு என்ன உத்தரவு வருகிறதோ, அதனை நான் பின்பற்றுவேன். எங்களுடைய கட்சியில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் விசயங்கள் எல்லாம், காங்கிரஸ் தேர்வு குழுவினரால் எடுக்கப்படும் என்று பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்