விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு
நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் கமிஷனை நாடியது. இந்த விண்ணப்பம் கடந்த 20.2.2024 அன்று அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தேர்தல் கமிஷனுக்கு இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்து, இதுகுறித்து உடனடியாக முடிவு எடுத்து அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டார். ஆனால் பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சச்சின் தத்தா முன் ஏப்ரல் 1-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் வி.சி.க.வுக்கு பானை சின்னம்தான், கடைசி நேரத்தில் மாறும் என்ற குழப்பம் வேண்டாம் என்று திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் விழுப்புரம் இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு பானைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார்.