ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வர் - பிரதமர் மோடி
ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஞ்சி,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.
இதையடுத்து, வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, வரும் 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
13ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். ஆனால், பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றுள்ளார்.
ஜார்க்கண்ட்டில் தேர்தல் நெருங்கி வரும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அம்மாநிலத்தின் கும்லா மாவட்டம் சிசாய் பகுதியில் இன்று பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,
ஊழல் செய்ததற்காக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அச்சுறுத்தல்களை மோடி அரசு துடைத்தெறியும். ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள்.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் கழுத்தளவு ஊழலில் மூழ்கியுள்ளனர். அவர்கள் டெல்லி, ராஞ்சியில் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல்கொடுத்து அவர்களின் உண்மை குணத்தை வெளிப்படுத்துகின்றனர்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் மாவட்டங்கள் பின் தங்கிய நிலையில் உள்ளதற்கு காங்கிரஸ்தான் காரணம். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பழங்குடியின குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்தபோது உணவு தானியங்கள் கிடங்குகளில் வீணாகின. ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இது மோடியின் உத்திரவாதம்
இவ்வாறு அவர் கூறினார்.